சென்னை, ஜனவரி.14-
கடந்த ஜனவரி 11- 12 ஆகிய தேதிகளில் சென்னை, நந்தம் பாக்கம், வர்த்தக மையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு அயலகத் தமிழர் திருநாள் மாநாட்டில் பினாங்கு மாநில அரசின் சார்பாக அதன் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு சோமு தலைமையில் உயர்மட்ட பேராளர்கள் குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த மாநாட்டின் தொடக்க விழாவைத் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். மாநாட்டின் இரண்டாவது நாளில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி, மாநாட்டிற்குச் சிறப்பு சேர்ந்தார்.

உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கிடையிலான உறவை மேம்படுத்துவதையும், எல்லைகளைத் தாண்டிய ஒத்துழைப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த மாநாட்டில் பினாங்கு மாநில அரசின் சார்பில் கலந்து கொண்ட பேராளர்கள் குழுவில் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் மற்றும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் ஆகியோர் அடங்குவர்.

உலகளாவிய தமிழ் சமூகத்துடன் பினாங்கு மாநில அரசு கொண்டுள்ள பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பினாங்கு பேராளர்கள் கலந்து கொண்ட வேளையில் மாநாட்டின் இரண்டாம் நாள், பினாங்கு மாநில அரசுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பான அங்கீகார விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த சிறப்பு அங்கீகார நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமர்ந்திருந்த பிரதான மேடையில் பினாங்கு அரசை கெளரவிக்கும் வகையில் டத்தோ ஶ்ரீ சுந்தராஜுவிற்கு உரிய இருக்கை வழங்கப்பட்டு, சிறப்பு செய்யப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், பினாங்கு மாநில பேராளர்கள் குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. உலகளவில் தமிழர்களின் பங்களிப்பையும், அவர்களின் கலாச்சாரத் தொன்மையையும் போற்றும் விதமாக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதாக டத்தோ ஶ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

தென்கிழக்கு ஆசியாவில் தமிழ் மரபின் கலங்கரை விளக்கமாகத் திகழும் பினாங்கின் பங்களிப்பை இந்த விருது மூலம் அங்கீகரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
பினாங்கு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே நிலவும் நீண்டகால வரலாற்று ரீதியான உறவையும், கலாச்சாரப் பிணைப்பையும் இந்த நிகழ்வு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

கல்வி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் பாரம்பரியப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் உலகளாவிய தமிழ் சமூகத்தை ஒருங்கிணைக்க இந்த மேடை ஒரு பாலமாக அமைந்தது என்று டத்தோ ஶ்ரீ சுந்தராஜு வர்ணித்தார்.
பினாங்கு மாநிலத்தின் சார்பில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களான குமரேசன் ஆறுமுகம், குமரன் கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து இந்தப் பெருமைமிகு அங்கீகாரத்தை டத்தோ ஶ்ரீ சுந்தராஜு பெற்றுக் கொண்டார்.

பினாங்கு மாநிலத்திற்கு வழங்கப்பட்ட இந்தச் சிறப்பான வரவேற்பிற்கும் அங்கீகாரத்திற்கும் தமிழ்நாடு அரசுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்ட டத்தோ ஶ்ரீ சுந்தராஜு தலைமையிலான பேராளர்கள் குழுவினர், வரும் தலைமுறையினருக்காகத் தமிழ் மரபைக் காக்கவும், உலகத் தமிழர்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும் தொடர்ந்து பாடுபடப் போவதாக உறுதி பூண்டனர்.








