ஜார்ஜ்டவுன், டிசம்பர்.01-
பினாங்கு, ஜார்ஜ்டவுன், அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தானத்தின் நான்காவது மகா கும்பாபிஷேகம், இன்று திங்கிட்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது..
பினாங்கில் பிரசித்தி பெற்ற விஸ்வகர்மா சிவ ஸ்ரீ எஸ். பிரசன்னா சிவாச்சாரியர் தலைமையில் காலை 7 மணிக்கும் 8 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேகத்தில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் திரளாக வந்து கலந்து கொண்டு காமாட்சியம்மனின் ஆசி பெற்றனர்.

அன்னை காமாட்சி அம்மன் கோபுர விமானத்திலும், அதனை தொடர்ந்து அனைத்து மும்மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தீபாரதனைக்குப் பிறகு விமானே கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மலர்கள் தூவப்பட்ட போது திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா என்று முழக்கமிட்டு கைக்கூப்பி தரிசனம் செய்தனர்.
இந்த மகா கும்பாபிஷேகத்திற்கு கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங், நிதித்துறை துணை அமைச்சர் லிம் ஹுய் யிங்கின் பிரதிநிதி மஞசிட், பினாங்கு முதல்வர் சோ கோன் யோவின் பிரதிநிதி அமுதா உட்பட இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

கும்பாபிஷேகம் குறித்து கருத்துரைத்த ஆலயத் துணைத் தலைவர் குமார திரவியம், இந்த மகா கும்பாபிஷேகத்திற்கு மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கம் மூலம் நல்ல ஆதரவு கிடைத்ததோடு சுமார் வெ.4 லட்சம் வரை நிதி உதவி கிடைத்ததாக விவரித்தார்.
இன்று திங்கட்கிழமை வேலை நாளாக இருந்த போதிலும் மக்கள் திரளாக வருகை புரிந்து கும்பாபிஷேகத்தை மேலும் சிறப்படையச் செய்துள்ளனர் என்று குமார திரவியம் கூறினார்.
1914 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட அன்னை காமாட்சி அம்மன் ஆலயம், தற்போது ஆலயத் தலைவர் வீரபத்திரா தலைமையேற்று சிறப்பாக வழி நடத்தி வருகிறார் என்று ஆலய கெளரவ செயலாளர் ரவீந்திரன் தெரிவித்தார்.

மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறுவதற்கு உதவிய பொதுமக்கள் மட்டுமின்றி மத்திய அரசாங்கத்திற்கும், பினாங்கு மாநில அரசாங்கத்திற்கும் நன்றிக் கூற ஆலய நிர்வாகம் கடமைப்பட்டுள்ளதாக ரவீந்திரன் தெரிவித்தார்.








