கோலாலம்பூர், ஜனவரி.29-
வரும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பத்துமலைத் திருத்தலத்தைத் தூய்மைப்படுத்தும் நோக்கோடும், நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வருகை தருவதையொட்டியும், இன்று மாலை 6 மணியளவில் பத்துமலைத் திருத்தலத்தில் மாபெரும் கூட்டுப்பணி மேற்கொள்ளப்பட்டது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜா தலைமையில் நடைபெற்ற இந்தத் தூய்மைப் பணியில், தேவஸ்தானப் பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு பொது இயக்கங்களின் பிரதிநிதிகள் என சுமார் 300-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்கினர்.
நிகழ்வின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய டான் ஶ்ரீ ஆர். நடராஜா, "தைப்பூசத் திருவிழாவிற்காக பத்துமலைக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், தங்களின் வழிபாடுகளை முடித்துச் செல்லும் போது திருத்தலத்தின் தூய்மையைப் பேணிக் காப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்; குப்பைகளை அங்கங்கே வீசாமல் முறையாக அப்புறப்படுத்தி பத்துமலை வளாகத்தின் புனிதத்தையும் தூய்மையையும் காக்க வேண்டும்" என அன்பான வேண்டுகோள் விடுத்தார்.
பத்துமலைத் திருத்தலத்தைத் தூய்மையாகப் பராமரிப்பது என்பது ஒரு கடமை மட்டுமல்ல, அது நமது கலாச்சாரப் பண்பாக மாற வேண்டும் என்பதே தேவஸ்தானத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள், 'தூய்மையே சேவை' என்ற உயரிய சிந்தனையோடு செயல்பட்டால், தைப்பூசத் திருவிழா ஆன்மீக ரீதியில் மட்டுமின்றி, சுற்றுப்புறத் தூய்மையிலும் ஒரு முன்மாதிரி விழாவாகத் திகழும் என்பதில் ஐயமில்லை என்று டான் ஶ்ரீ நடராஜா வலியுறுத்தினார்.








