ஜார்ஜ்டவுன், ஜனவரி.27-
பினாங்கு தைப்பூசத்தில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வெள்ளி இரத ஊர்வலமானது இவ்வாண்டு வழக்கமான நேரத்தை விட்ட சற்று முன்கூட்டியே துவங்க, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக தைப்பூசத்திற்கு முந்தைய நாள் ஜார்ஜ்டவுனில் இருந்து அதிகாலை 7 மணியளவில் புறப்படும் இந்த வெள்ளி இரதமானது, இவ்வாண்டு 5.30 மணியளவில் புறப்பட கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக நகரத்தார் நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலய தர்மகர்த்தா சி. வீரப்பன் தெரிவித்துள்ளார்.
இதனால், ஆலயத்தில் வழிபாடு செய்ய பக்தர்களுக்குப் போதுமான நேரம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்றாலும், இந்த அனுமதியானது அதிகாரிகளால் இன்னும் அங்கீகரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சி. வீரப்பன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டுகளில், இந்த வெள்ளி இரதமானது, மறுநாள் அதிகாலை சுமார் 2 மணியளவிலேயே ஜாலான் கெபூன் பூங்கா வாட்டர்ஃபோலில் உள்ள நகரத்தார் நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயத்தை வந்தடைவதை வழக்கமாகக் கொண்டிருந்தது.
இதனிடையே, இரதத்தை இழுத்துச் செல்லும் காளைகளின் சுமையைக் குறைப்பதற்காக, அதன் எண்ணிக்கையானது 16 ஜோடிகளிலிருந்து 17 ஜோடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் வீரப்பன் தெரிவித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கு நகரை வலம் வரும் இந்த வெள்ளி இரத நிகழ்வானது 169-ஆவது ஆண்டை எட்டியுள்ளது.
கடந்த 1859-ஆம் ஆண்டில் ஒரு மரத் தேருடன் தொடங்கிய இந்த பாரம்பரிய நிகழ்வானது, அதன் பின்னர் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, 1894-ஆம் ஆண்டு, ஏழு மீட்டர் உயரமுள்ள வெள்ளி இரதமாக உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








