ஈப்போ, ஜனவரி.19-
தைப்பூசத்தை முன்னிட்டு ஈப்போ, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்குப் பால்குடம் மற்றும் காவடிகள் ஏந்திச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, இன்னும் முழுமையாக நிறைவு பெறாத ஜாலான் துன் ரசாக் பாலத்தின் ஒரு பகுதி திறந்து விடப்படும் என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட இலாக்காக்களுடன் ஆலோசித்த பிறகு, இம்மாதம் 28-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை பக்தர்கள் இந்தப் பாலத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இரவு வேளைகளில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காவடிகள் மற்றும் அந்தக் காவடிகளை ஏந்தி வரும் 3 டன் எடை வரையிலான லாரிகள் மட்டும் இந்தப் பாலத்தில் செல்ல அனுமதி வழங்கப்படும் என்றார்.
ஈப்போவின் மிக முக்கியப் பாலமான இதில் ஏற்பட்ட பழுதுகளைச் சீரமைக்க, 1.75 மில்லியன் வெள்ளி செலவில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சில காரணங்களால் இப்பணி இன்னும் முழுமையடையவில்லை என்றாலும், தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்களின் நலன் கருதி இந்தத் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக துளசி மனோகரன் தெரிவித்தார்.
மேலும் தைப்பூச விழாக் காலம் முடிந்த பிறகு, மீதமுள்ள கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பாலம் முழுமையாகத் திறக்கப்படும் என மாநில அரசாங்கச் செயலகத்தில் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசனுடன் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் துளசி மனோகரன் இதனைத் தெரிவித்தார்.








