கோலாலம்பூர், ஜனவரி.18-
பத்துமலை திருத்தலத்தில் அமையவுள்ள மின்படிக்கட்டு திட்டத்திற்கான தற்காலிக நில உரிமம் தொடர்பான சிக்கல்களைக் களைய அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நில விண்ணப்பம் தனிப்பட்ட பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு கருதியதால், சட்டப்பூர்வ அனுமதியை வழங்குவதில் இதுவரை தாமதம் ஏற்பட்டு வந்தது.

இதற்குப் பதிலளித்த கோலாலம்பூர் மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஶ்ரீ நடராஜா, தாம் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்கவில்லை என்றும், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் என்ற முறையிலேயே விண்ணப்பத்தைச் சமர்ப்பித்ததாகவும் தெளிவுபடுத்தினார். 1930-ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி இக்கோயில் ஒரு அறக்கட்டளையின் கீழ் இயங்குவதால், அந்த சட்ட விதிகளுக்கு உட்பட்டே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
தற்போது நிலுவையில் உள்ள நீதிமன்ற விசாரணைகள் மூலம் இந்த நிலச் சிக்கலுக்குத் தீர்வு காண இரு தரப்பும் உடன்பாடு கண்டுள்ளன.

தற்சமயம் இந்த மின்படிக்கட்டு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், பொதுமக்களின் நலன் கருதி, சட்ட விதிகளுக்கு உட்பட்டு இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த ‘மடானி’ அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.
இன்று பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரிந்த அமைச்சர் கோபிந்த் சிங், கோயில் நிர்வாக அலுவலகத்தில் நடந்த சந்திப்புக் கூட்டத்திலும் கலந்து கொண்டார். இவ்விவகாரம் தொடர்பில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து கலந்தாலோசிக்கப்பட்ட அக்கூட்டத்தில் கோலாலம்பூர் மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஶ்ரீ நடராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர் டத்தோ ந. சிவக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு உட்பட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.








