கோலாலம்பூர், ஜனவரி.28-
தைப்பூசத் திருநாளையொட்டி வரும் ஜனவரி 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரியவிருக்கும் பிரதமர் டத்தோ செஇ அன்வார் இப்ராஹிமிடம் தாம் எதுவும் கேட்கப் போவதில்லை என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ டத்தோ டாக்டர் ஆர்.நடராஜா தெரிவித்தார்.
பிரதமரிடம் பணம் உட்பட எதுவும் கேட்கப் போவதில்லை. பத்துமலைத் திருத்தலத்திற்கு அரசாங்கம் பணம் கொடுத்து வருவதைப் போல விமர்சனம் செய்யப்பட்டு வருவதால் பிரதமர் வருகையின் போது தேவஸ்தானம் சார்பில் தாம் எதுவும் கேட்கப் போவதில்லை என்று டான் ஶ்ரீ நடராஜா தெரிவித்தார்.
இன்று மதியம் பத்துமலைத் திருத்தலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் அவர் டான் ஶ்ரீ நடராஜா இதனைத் தெரிவித்தார்.
அதே வேளையில் தைப்பூசத்தையொட்டி பத்துமலையில் வெளிநாட்டுக்காரர்களுக்கு அதிகமான கடைகள் தரப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை டான் ஶ்ரீ நடராஜா வன்மையாக மறுத்தார்.
பத்துமலைத் திருத்தலத்திற்கு வெளியே நடக்கும் சட்டவிரோத வாகன நிறுத்தும் இடங்கள், கடைகள் ஏலத்திற்கு விடப்படுவது போன்றவற்றுக்கும், தேவஸ்தானத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை டான் ஶ்ரீ நடராஜா இன்றைய செய்தியாளர்கள் கூட்டத்தில் தெளிவுபடுத்தினார்.








