ஆலய விவகாரங்களில் மிரட்டல் , அழுத்தங்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது என்றும், சம்பந்தப்பட்ட தரப்பினர் அரசாங்கத்துடன் முறையாகப் பேசி, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தீர்வு காண முன்வர வேண்டும் எனவும் பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
“அரசாங்கத்தை மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பதை தாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும், தாம் இருக்கும் வரை அரசாங்கத்தை அந்த வகையில் கட்டுப்படுத்த முயற்சிப்பது நடைபெறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈப்போவில் உள்ள அருள் மிகு விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவநேசன், சில இடங்களில் பழமையான வழிபாட்டுத் தலங்கள் மோசமான நிலையில் இருப்பதால், அங்குள்ள சிலைகள் , வழிபாட்டுப் பொருட்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது தொடர்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
அதேவேளையில், நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட முக்கியமான ஆலயம் ஒன்றை அதன் தற்போதைய இடத்திலிருந்து அகற்றும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாது என்றும் சிவநேசன் உறுதியளித்தார்.

இதனிடையே பெரும்பாலான ஆலயங்கள் இந்தத் திட்டத்திற்கு சம்மதிக்கும் நிலையில், ஒரு ஆலயம் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்குமானால், அரசாங்கம் நடைமுறைகள் , விதிமுறைகளுக்கு ஏற்ப அடுத்தகட்ட முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் எச்சரித்தார்.
மேலும், கடந்த காலங்களில் சில ஆலயங்கள் பதிவு செய்யப்பட்ட போது, தலைவர், துணைத் தலைவர், செயலாளர் உள்ளிட்ட ஏழு பேரின் பெயர்கள் , அவர்களின் அஞ்சல் முகவரிகளை அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டதாகவும், ஆலயம் அமைந்துள்ள நிலம் தொடர்பான போதுமான ஆவணங்கள் அவசியமாகக் கருதப்படவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஆனால், தற்போது ஆலயப் பதிவு , நிர்வாக நடைமுறைகள் மாற்றம் கண்டுள்ளதுடன், ஆலயம் அமைந்துள்ள நிலம் தொடர்பான ஆதாரம் , உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் முக்கியமாகக் கருதப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.
இந்நிலையில், ஆலயங்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முறையான நிர்வாகம், சட்ட விதிமுறைகள் , வழிபாட்டுத் தலங்களின் நீண்டகால பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்படும் என சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ சிவநேசன் வலியுறுத்தினார்.








