Aug 16, 2026
Thisaigal NewsYouTube
போலி டிக் டாக் கணக்குகளில் அவதூறு தகவல் – பொதுமக்கள் நம்ப வேண்டாம்
ஆன்மிகம்

போலி டிக் டாக் கணக்குகளில் அவதூறு தகவல் – பொதுமக்கள் நம்ப வேண்டாம்

Share:

சிரம்பான், செனாவாங், தாமான் துவாங் ஜஃபார் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா ராஜராஜேஸ்வரர் தேவஸ்தானம் குறித்து போலியான டிக் டாக் கணக்குகள் மூலம் அவதூறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகக் கூறியுள்ள ஆலய நிர்வாகம், அவற்றை பொதுமக்கள் நம்பவோ, பகிரவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

அண்மைக் காலமாக ஆலயம், வேகமான வளர்ச்சியை அடைந்து வருவதுடன், தேவஸ்தான அந்தஸ்தையும் பெற்றுள்ளது. ஆகவே, அதன் ஆன்மிகப் பணிகளும் விரிவடைந்து வருகின்றன. இதற்கு பக்தர்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும் அதிகரித்து வருவதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆலயத்தின் வளர்ச்சியையும் ஆன்மிகப் பணிகளையும் விரும்பாத சில தரப்பினர், ஆலயத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஆதாரமற்ற மற்றும் அவதூறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது போன்ற தகவல்கள் எந்தவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையிலும் வெளியிடப்படாத நிலையில், பொதுமக்கள் அவற்றை உண்மை என நம்ப வேண்டாம் என்றும், சரிபார்க்கப்படாத தகவல்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம் என்றும் ஆலய நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், போலியான கணக்குகள் மூலம் இத்தகைய தகவல்களைப் பரப்பி வருபவர்கள் யார் என்பதை கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி மற்றும் போலீஸ் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் நற்பெயரையும், பக்தர்களின் நம்பிக்கையையும் பாதுகாக்கும் வகையில், உண்மையான தகவல்களை ஆலய நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ தளங்கள் மூலம் மட்டுமே தெரிந்து கொள்ளுமாறு பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related News