பகாங், பெரா, திரியாங், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் 118 ஆம் ஆண்டு வருடாந்திர ஆடிப்பூரத் திருவிழா இன்று ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில், ஆலயத்தின் உற்சவத்தையொட்டி, நேற்று வியாழக்கிழமை ஆலய வளாகத்தில் மாபெரும் கலைவிழா நடைபெற்றது.
இக்கலைவிழாவிற்கு பகாங் மாநில ஒற்றுமை, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை ஆட்சிக்குழு உறுப்பினரும், திரியாங் சட்டமன்ற உறுப்பினருமான லியாங் யூ மேன், பெரா மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் டி.எஸ்.பி குமரன் ஞானசேகரன் மற்றும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் ஒருங்கிணைப்பு பேரவையான மஹிமாவின் தலைவர் டத்தோ என். சிவகுமார் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.
ஆலயத் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இக்கலைவிழாவில் ராக்மென்ட்ரி இசைக்குழு மற்றும் பிரபல கலைஞர்கள் இசை விருந்து படைத்தனர்.

கலைவிழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய ஆட்சிக்குழு உறுப்பினர் லியாங் யூ மேன், இத்தகைய கலைவிழாவையும், ஆலய வருடாந்திர திருவிழாவையும் சிறப்பாக முன்னெடுத்த ஆலய நிர்வாகத்திற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார். திரியாங்கில் பல இன மக்கள் வாழ்கின்றனர். இது போன்ற விழாக்கள் தொடரப்படும் அதேவேளையில் இத்தகைய விழாக்களில் பக்தர்களின் வருகையை கவர்வதோடு நின்று விடாமல் உள்ளூரை சேர்ந்த பிற இனத்தவர்களையும் கவர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து இது போன்ற கொண்டாட்டங்களில் கலந்த கொள்ள வேண்டும் என்று லியாங் யூ மேன், வலியுறுத்தினார்.
ஆலயத்தின் வருடாந்திர திருவிழாவில் தாம் கலந்து கொள்வது இது ஆறாவது ஆண்டு என்ற போதிலும் உள்ளூர் மக்கள் சட்டங்களை அதிகமாக மதிப்பதால், குற்றச்செயல்கள் குறைந்து, போலீசாரின் பணிகளையும் சுலபமாக்கி வருகிறது என்று கலைவிழாவிற்கு சிறப்பு வருகை புரிந்த பெரா மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் டி.எஸ்.பி குமரன் ஞானசேகரன் தெரிவித்தார்.
ஆலயத் தலைவர் சரவணன் தலைமையிலான நிர்வாகத்தினருக்கு தமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்ட மஹிமாவின் தலைவர் டத்தோ என். சிவகுமார், ஆலயத்திற்கு நிரந்த வருமானத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற நோக்கில் ஆலய நிர்வாகத்தின் கீழ் சொந்தமாக கடைகளை நிர்மாணித்து ஆலயத்திற்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்தி தந்துள்ள முயற்சி, மற்ற ஆலயங்கள் முன்னுதாரமாக கொள்ள வேண்டியவை என்றார்.

ஆலயத்திற்கு மித்ரா வழங்கிய 20 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவியானது, ஆலயத்தின் சீரமைப்பு போன்ற இதர பணிகளுக்கு பயன்படுத்தாமல் ஆலயத்தில் நமது மாணவர்களுக்கு சமய வகுப்புகள்,தேவார வகுப்புகள், சிலம்பக் கலை போன்ற மித்ராவின் நோக்கத்திற்கு ஏற்ப ஆலயம் அந்த நிதியை நல்ல முறையில் பயன்படுத்தி வருவதாக ஆலயத் தலைவர் சரவணன் விவரித்தார்.
முன்னதாக மித்ரா மூலமாக வழங்கப்பட்ட நிதியை தேவார வகுப்பு. மேள நாதஸ்வர பயிற்சி வகுப்பு, பரதநாட்டிய வகுப்பு மற்றும் சிலம்பக் கலை பயிற்சி வகுப்பு என ஆலய நிர்வாகம் பிரித்து கொடுத்த மாதிரி காசோலைகளை ஆட்சிக்குழு உறுப்பினர் லியாங் யூ மேன், சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் ஒப்படைத்தார்.









