கோலாலம்பூர், அக்டோபர்.28-
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மேலும் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதற்கும், அந்த வாரியத்தின் கீழ் உள்ள இந்து ஆலயங்களின் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், மத்திய அரசாங்கத்தின் மூலம் 10 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஜெலுத்தோங் எம்.பி. ஆர்எஸ்என் ராயர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
2 இந்திய சமுதாயத்தின் சமூகவியல், பொருளாதார உயர்விற்குப் பல்வேறு திட்டங்களின் வாயிலாக 42.25 மில்லியன் ரிங்கிட்டையும், தர்ம மடானி திட்டத்தின் கீழ் இந்து ஆலயங்களுக்கு உதவுவது உட்பட இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 50 மில்லியன் ரிங்கிட்டையும் , ஒதுக்கியிருக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு, ராயர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அதே வேளையில் பத்துமலை திருத்தலத்திற்குப் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு பிரதமர், 10 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதைக் கண்டு தாம் மகிழ்ச்சி கொள்வதாக ராயர் குறிப்பிட்டார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் என்ற முறையில் தமது தலைமைத்துவத்தில் உள்ள வாரியத்திற்கும் 10 லட்சம் ரிங்கிட் நிதியை வழங்குவதற்கு பிரதமர் ஆவனம் செய்ய வேண்டும் என்று ராயர் கேட்டுக் கொண்டார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கணக்கு அறிக்கை தேசிய கணக்காய்வுக் குழுவால் தணிக்கை செய்யப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அந்த கணக்கு அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. அதே போன்று அரசாங்கம் வழங்கக்கூடிய இந்த 10 லட்சம் நிதி ஒதுக்கீட்டின் கணக்கு அறிக்கையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என்று ராயர் குறிப்பிட்டார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம், சமய நடவடிக்கைகளுக்கு மேலும் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றுவதற்கு ஓர் உன்னத நோக்கத்திற்காகக் கோரப்படும் இந்த நிதி ஒதுக்கீட்டை பிரதமர் அங்கீரிக்க வேண்டும் என்று ராயர் தமது உரையில் கேட்டுக் கொண்டார்.








