கோலாலம்பூர், ஜனவரி.31-
தைப்பூசத்தையொட்டி பத்துமலைத் திருத்தலத்திற்குப் பயணிக்கும் பக்தர்களுக்கு, இவ்வாண்டும் ஒரு மிகப் பெரிய இன்ப அதிர்ச்சி தரப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சு மற்றும் மலாயன் ரயில்வே பெர்ஹாட்டும் இணைந்து இன்று ஜனவரி 31 ஆம் தேதியும், நாளை பிப்ரவரி முதல் தேதியும் இலவச ரயில் சேவை வழங்கப்பட்டுள்ளது.
பத்துமலைக்குச் செல்லும் பக்தர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கினால் அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குக் கட்டணமில்லா ரயில் சேவையில் இந்தச் சலுகையைப் பயன்படுத்தி, போக்குவரத்து நெரிசலின்றி பத்துமலைத் திருத்தலத்தை வந்தடைந்த பக்தர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கின்றனர்.
கேடிஎம்பி மூலம் போக்குவரத்து அமைச்சின் இந்த மகத்தான முன்னெடுப்பு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், சாமானிய மக்களின் சுமையையும் குறைத்து இருப்பது இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டத்தை மேலும் இனிமையாக்கியுள்ளது என்றால் அது மிகையல்ல.








