ஜார்ஜ்டவுன், ஜனவரி.31-
பினாங்கு தைப்பூச விழா என்பது சமய, கலாச்சார பன்முகத்தன்மையின் அடையாள மட்டுமின்றி ஒற்றுமையை வலுப்படுத்தும் ஓர் உந்தும் சக்தி என்று மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் பெருமிதம் தெரிவித்தார்.

இவ்வாண்டு பினாங்கு தைப்பூசத்தில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கேற்ப மக்கள் தங்களின் பயணங்களைத் திட்டமிட்டு வருகின்றனர் என்று சாவ் கோன் இயோவ் குறிப்பிட்டார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் பினாங்கு தண்ணீர் மலை ஆலயங்களின் தைப்பூச விழாவையொட்டி ஆர்எஸ்என் ராயர் தலைமையிலான பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் அலுவலகத்திற்கு வருகை புரிந்த சாவ் கோன் இயோவ் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

இந்த முறை, ரதங்களில் புறப்பாட்டில் விஷேச செயலி பயன்படுத்தப்படுவதால் ரதம் வருகின்ற துல்லியமான இடங்களை அறிவதற்கான வசதிகளை ஆலய நிர்வாகங்கள் செய்து இருப்பது பக்தர்களுக்கு பெரும் துணையாக இருக்கும் என்றார் முதலமைச்சர்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்எஸ்என் நாயர், பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு சோமு, மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் லிம் ஹூய் யிங், புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லினா அப்துல் ரஷிட், பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், மாநில சுற்றுலா, பொருளாதார புத்தாக்கத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹோன் வாய், டாக்டர் லிங்கேஸ்வரன் மற்றும் பினாங்கு டத்தோ பண்டார் டத்தோ A. ராஜேந்திரன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பினாங்கு மாநிலத்தின் தைப்பூசத் திருவிழாவிற்கு மேலும் ஒரு மணிமகுடமாக, அமைக்கப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட தண்ணீர் பந்தல்களுக்கு முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ சாவ் கோன் இயாவ் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் நேரில் வருகை தந்தனர்.

அப்போது முதலமைச்சர் உட்பட பிரமுகர்களுக்கு மேளதாள நாதஸ்வர இசையுடன் தண்ணீர் பந்தல் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பை நல்கினர்.

நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் திரண்டிருந்த வேளையில், ஒவ்வொரு பந்தலையும் ஆர்வத்துடன் பார்வையிட்ட முதலமைச்சர், அங்கு வழங்கப்பட்ட சேவைகளையும் அன்னதானப் பணிகளையும் வெகுவாகப் பாராட்டினார்.

முதலமைச்சரின் இந்த அன்பான வருகையினால் நெகிழ்ந்த பந்தல் நிர்வாகிகள், அவருக்கும், பிரமுகர்களுக்கும் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் தங்களின் மிகுந்த மரியாதையையும் நன்றியையும் வெளிப்படுத்தினர்.

பினாங்கு மாநிலத்தின் கலாச்சார ஒற்றுமைக்கும், பக்திக்கும் மதிப்பளிக்கும் வகையில் அமைந்த முதலமைச்சரின் இந்த நேரடி சந்திப்பு, தண்ணீர் பந்தல் நிர்வாகிகள் மற்றும் பக்தர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.








