கோலாலம்பூர், ஜனவரி.31-
கோலாலம்பூர் தலைநகரின் பிரதான வீதிகளில் சுமார் 23 மணி நேரத்திற்கும் மேலாகப் பவனி வந்த முருகப் பெருமானின் வெள்ளி ரதம், தற்போது கோலாலம்பூர் எல்லையைக் கடந்து சிலாங்கூர் மாநில எல்லைக்குள் நுழைந்துள்ளது. இதனை முன்னிட்டு, அதுவரை ரதத்திற்குப் பாதுகாப்பு அரணாக இருந்த கோலாலம்பூர் போலீசார், ரதத்தின் பாதுகாப்புப் பொறுப்பைச் சிலாங்கூர் போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தனர்.
நேற்று இரவு 9 மணிக்கு கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட ரத ஊர்வலம், இன்று இரவு 8.30 மணியளவில் பத்துமலை சாலை வட்டத்தின் எல்லைப் பகுதியை வந்தடைந்தது. அங்கே இரு மாநில போலீசாருக்கும் இடையே நடைபெற்ற இந்த 'பாதுகாப்புப் பொறுப்பு மாற்றும் நிகழ்வு மிகவும் நேர்த்தியாகவும், பக்தி மணம் கமழவும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, இனி ரதம் பத்துமலை திருத்தலத்தை அடையும் வரை சிலாங்கூர் மாநில போலீசார் தங்களின் பாதுகாப்புப் பணியைத் தொடரவுள்ளனர். வெள்ளி ரதத்தின் இந்த நெடிய பயணத்தில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றிய கோலாலம்பூர் போலீசாருக்குப் பக்தர்கள் தங்களின் நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்
சுமார் 24 மணி நேரத்தை நெருங்கும் இந்த நெடிய பயணத்தில், கொட்டும் மழையிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் சற்றும் அயராது, பக்தர்களின் பாதுகாப்பையே பிரதானமாகக் கொண்டு பணியாற்றிய காவல்துறையினரின் கடமையுணர்வு மெச்சத்தக்கது.








