கோலாலம்பூர், ஜனவரி.31-
மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், முருகப் பெருமானின் ஞானவேல் போல இளைஞர்களின் அறிவாற்றல் நவீன காலத்திற்கு ஏற்ப விரிவடைய வேண்டும் என தைப்பூச வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பங்களைச் சவாலாகப் பார்க்காமல், பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்பாகக் கருதி இளைஞர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், இந்திய இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக HRD Corp மூலம் 10 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 'வெற்றி மடானி' திட்டம் செயல்படுத்தப்படுவதை அவர் நினைவு கூர்ந்தார்.
இந்திய இளைஞர்கள் வெறும் வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல், வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும், நவீன தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் உருவெடுக்க வேண்டும் என்பதே தமது கனவு என அமைச்சர் ரமணன் சுட்டிக் காட்டினார்.
முருகப் பெருமானின் ஞானவேல் எவ்வாறு கூர்மையாகவும், ஆழமாகவும், அகலமாகவும் இருக்கிறதோ, அதே போல் நமது இளைஞர்களின் சிந்தனையும், தொழில்நுட்பத் திறன்களும் உலகத் தரத்திற்கு உயர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நமது சமூகத்தின் பொருளாதார வலிமை என்பது அறிவாற்றல் சார்ந்த பொருளாதாரத்தில் அடங்கியுள்ளது என்பதை வலியுறுத்திய அவர், இந்தியச் சமூகம் ஒரு போதும் பின்தங்கிவிடக் கூடாது என்பதில் தமது அமைச்சரவை உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தத் தைப்பூசத் திருநாள், இந்திய இளைஞர்கள் அனைவரும் டிஜிட்டல் யுகத்தின் வெற்றியாளர்களாக மாற ஒரு புதிய தொடக்கமாய் அமையட்டும் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மங்கலகரமாகப் பகிர்ந்து கொண்டார்.








