Jan 30, 2026
Thisaigal NewsYouTube
அன்னை மடியில் ஆசி பெற்று... பத்துமலை நோக்கிப் புறப்பட்டது அழகன் முருகனின் வெள்ளி ரதம்
ஆன்மிகம்

அன்னை மடியில் ஆசி பெற்று... பத்துமலை நோக்கிப் புறப்பட்டது அழகன் முருகனின் வெள்ளி ரதம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.30-

"ஈன்றவளின் இனிய ஆசி பெற்று, ஈரேழு உலகையும் காக்கும் வேலவன், தனது அன்னை மகா மாரியம்மன் திருத்தலத்தில் இருந்து பத்துமலையை நோக்கிப் பக்திப் பெருக்கோடு புறப்பட்டார்.

தைப்பூசத் திருநாளின் புனிதத் தொடக்கமாக, கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அன்னையின் பொற்பாதம் பணிந்து, வள்ளி - தெய்வானை சமேதராய் அழகன் முருகன் இன்று இரவு 9 மணியளவில் வெள்ளி ரதத்தில் பவனி வரத் தொடங்கினார்.

இயற்கை அன்னை பொழிந்த மெல்லிய மழைத் தூறல், தேவர்களின் ஆசி போல நனைய வைக்க, திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் "அரோகரா" கோஷம் விண்ணைப் பிளக்க, மேளதாள நாதஸ்வர மங்கல இசை முழங்க பத்துமலையை நோக்கி இந்த ஆன்மீகப் பயணம் இனிதே ஆரம்பமானது.

வெள்ளி ரதம் புறப்பாட்டிற்கு முன்னதாக, முருகப் பெருமானுக்குப் பல நறுமணத் திரவியங்களால் விசேஷ அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் டான் ஶ்ரீ டத்தோ நடராஜா, புவான் ஶ்ரீ மல்லிகா, அறக்காவலர் டத்தோ என்.சிவகுமார் மற்றும் தேவஸ்தானப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று தரிசனம் செய்தனர்.

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பிரம்மாண்ட வெள்ளி ரதத்தில், முருகப் பெருமான் பக்தர்களுக்கு புன்னகை தவழக் காட்சி தந்த நிலையில், மேளதாள நாதஸ்வர இசையோடு ரதம் நகரத் தொடங்கியது.

வெள்ளி ரதப் புறப்பாட்டின் புனிதத் தொடக்கமாக, டான் ஶ்ரீ நடராஜா அவர்கள் முன்னிலையில், 'வெற்றிவேல்... வீரவேல்...' எனத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி முழக்கம் விண்னை எட்ட, அழகன் முருகப் பெருமானின் திருவுருவச் சிலையைத் தாங்கியவாறு பக்தர்கள் பக்திப் பெருக்குடன் ஊர்வலமாக வந்தனர். தெய்வீக மங்கல இசை முழங்க, அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் முருகப் பெருமானை வெள்ளி ரதத்தில் அரியாசனத்தில் அமரச் செய்தனர்.

ஆலயத்திலிருந்து புறப்பட்ட ரதம் பத்துமலை சென்றடையும் வரை, வழிநெடுகிலும் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அர்ச்சனைகளை முருகப் பெருமான் ஏற்றுக் கொண்டே செல்லவிருக்கிறார்.

முதியவர்கள் கைகூப்பித் தொழ, இளையவர்கள் "வேல் வேல்" என முழக்கமிட, அந்த இடமே சிவகமயமாகக் காட்சி அளிக்கிறது. பக்தர்களின் வசதிக்காகப் பாதையெங்கும் தன்னார்வலர்களால் ஏராளமான தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீர், மோர் மற்றும் உணவுகளை வழங்கிப் பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனைத் தொடங்குவது காண்போரை நெகிழச் செய்கிறது.

ரதத்தின் பின்னே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்களை ஏந்தி பக்திப் பரவசத்துடன் நடந்து வருகின்றனர். கோலாலம்பூர் போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலத்தை வழிநடத்திச் செல்கின்றனர். பல்வேறு சாலைகளைக் கடந்து, அருள் தரும் இந்த வெள்ளி ரதம் நாளை சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் பத்துமலைத் திருத்தலத்தைச் சென்றடையும்.

இந்த ஆண்டு, பக்தர்கள் ரதத்தின் உண்மையான இருப்பிடத்தை அறிந்து கொள்ள Batu Caves Thaipusam Live Tracker தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரியமும் நவீனமும் கைகோர்க்கும் இந்தக் காட்சியை, "அறிவியலும் ஆண்டவனும் இணைந்த அற்புதத் தருணம்" என்று வர்ணிக்கலாம்.

Related News

பத்துமலைக்கு பிரதமர் வருகை: டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு திருவுருவ ஓவியம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது

பத்துமலைக்கு பிரதமர் வருகை: டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு திருவுருவ ஓவியம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது

பினாங்கு தைப்பூச பாதுகாப்புப் பணியில் 1,280 போலீசார் குவிப்பு: அதிகாரிகளின் அறிவுரைகளைக் கடைபிடிக்க பொதுமக்களுக்கு வலியுறுத்து

பினாங்கு தைப்பூச பாதுகாப்புப் பணியில் 1,280 போலீசார் குவிப்பு: அதிகாரிகளின் அறிவுரைகளைக் கடைபிடிக்க பொதுமக்களுக்கு வலியுறுத்து

நாளை பிரதமர் வருகை: பத்துமலை வளாகத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் கூட்டுப்பணி

நாளை பிரதமர் வருகை: பத்துமலை வளாகத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் கூட்டுப்பணி

சுங்கை பட்டாணி தைப்பூசத் திருவிழா: 80,000 பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு; 494 போலீசார் பாதுகாப்புப் பணியில் தீவிரம்

சுங்கை பட்டாணி தைப்பூசத் திருவிழா: 80,000 பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு; 494 போலீசார் பாதுகாப்புப் பணியில் தீவிரம்

பத்துமலைக்கு வருகை புரியும் பிரதமரிடம் எதுவும் கேட்கப் போவதில்லை: தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ நடராஜா கூறுகிறார்

பத்துமலைக்கு வருகை புரியும் பிரதமரிடம் எதுவும் கேட்கப் போவதில்லை: தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ நடராஜா கூறுகிறார்

பேராவில் 11 ஆலயங்களில் தைப்பூச விழா: ஆகம முறைப்படி காணிக்கை செலுத்த வேண்டும்

பேராவில் 11 ஆலயங்களில் தைப்பூச விழா: ஆகம முறைப்படி காணிக்கை செலுத்த வேண்டும்