கோலாலம்பூர், ஜனவரி.30-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பத்துமலைத் திருத்தலத்திற்குச் சிறப்பு வருகை மேற்கொண்டார். கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜாவின் அழைப்பை ஏற்று, இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அவர் வருகை தந்தார்.

பத்துமலைக்கு வருகை தந்த பிரதமரைத் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜா மற்றும் அதன் அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் ஆகியோர் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்துச் சிறப்புடன் வரவேற்றனர்.

பிரதமரின் இந்த வருகையையொட்டி, தேவஸ்தானம் மற்றும் அமைச்சர்கள் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன், கோபிந்த் சிங், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோர் சார்பில் பிரதமருக்குச் சிறப்பு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நாட்டின் முன்னணி ஓவியர் லேனா அவர்களால் வரையப்பட்ட பிரதமரின் திருவுருவ ஓவியம், அந்த ஓவியருடன் இணைந்தே பிரதமரிடம் வழங்கப்பட்டது.








