கோலாலம்பூர், ஜனவரி.31-
கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் மூடா (MUDA) கட்சியின் சார்பில் 2026-ஆம் ஆண்டுக்கான தைப்பூசத் தண்ணீர் பந்தல் சேவை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் டாக்டர் சிவபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்தத் தொண்டுப் பணியில், நாட்டின் பல்வேறு இனங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தன்னார்வலர்களாக ஒன்றிணைந்து பக்திப் பெருக்கோடு வருகை தந்த பக்தர்களுக்கு இலவச பானங்களை விநியோகித்தனர்.

கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இந்தச் சேவையை வழங்கி வரும் மூடா, இதன் மூலம் இளைஞர்களிடையே சமூகச் சேவையையும், இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையையும் பறைசாற்றியுள்ளது.

இந்த நற்பணிக்கு ஊக்கமளிக்கும் வகையில், ஜோகூர் புத்ரி வங்சா சட்டமன்ற உறுப்பினரும், மூடா கட்சியின் முக்கியத் தலைவருமான அமீரா ஆயிஷா நேரில் கலந்து கொண்டு சிறப்பித்தார். தைப்பூசம் என்பது வெறும் சமயம் சார்ந்த திருவிழா மட்டுமல்ல, அது மனிதாபிமானத்தையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தும் களம் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது என டாக்டர் சிவபிரகாஷ் குறிப்பிட்டார்.

பல்வேறு பின்னணிகளைக் கொண்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆற்றிய இந்தப் பணி, மலேசியாவின் பன்முகத்தன்மைக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது என்றார் டாக்டர் சிவபிரகாஷ்.








