ஜார்ஜ்டவுன், ஜனவரி.31-
முருகப் பெருமானின் உற்சவத் திருநாளான நாளை தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பினாங்கில் இன்று அதிகாலை 6 மணியளவில், அலங்கரிக்கப்பட்ட தங்க இரதமானது, Queen வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து முருகப் பெருமானின் புனித ஆயுதமான வேலை ஏந்தியபடி, Jalan Kebun Bunga-விலுள்ள தண்ணீர்மலை அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபானி ஆலயத்தை நோக்கிப் புறப்பட்டது.
இதனையடுத்து, காலை 7 மணியளவில், பினாங்கு வீதியிலுள்ள நகரத்தார் கோவில் வீட்டிலிருந்து உற்சவ மூர்த்தியாக முருகப் பெருமானின் திருவுருவச் சிலையை சுமந்தப்படி வெள்ளி இரதமானது புறப்பட்டது.
தங்க இரதமும், வெள்ளி இரதமும் அடுத்தடுத்து Chulia வீதி, Victoria வீதி, Maxwell சாலைகளில் பவனி வரத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், அழகிய இரத ஊர்வலத்தைக் காண காலை 5 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்களும், பார்வையாளர்களும் பினாங்கு வீதிகளில் திரண்டனர்.
தன்னார்வலர்களும், கோயில் நிர்வாகிகளும், பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கும், பாரம்பரிய இசைக்கும் மத்தியில் இரதங்களை இயக்கிச் சென்றனர்.
இரதங்களானது புறப்படும் போது பக்திப் பரவசமடைந்த பக்தர்கள், “வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா”, “வீரவேல் முருகனுக்கு அரோகரா” என முழக்கமிட்டது அங்கிருந்த பார்வையாளர்களை மெய்சிலிரிக்க வைத்தது.
இந்த இரு இரதங்களும் இன்று நள்ளிரவில் தண்ணீர்மலையில் வீற்றிருக்கும் தத்தம் ஆலயங்களைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தங்க இரதத்தில், தங்க முலாம் பூசப்பட்ட அலங்காரங்களும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளும் இடம் பெற்றுள்ளார்.
தங்க இரதமானது அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, கடந்த 1859-ஆம் ஆண்டில், ஒரு மரத்தால் ஆன தேருடன் தொடங்கிய இந்த பாரம்பரிய நிகழ்வானது, அதன் பின்னர் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, 1894-ஆம் ஆண்டு, ஏழு மீட்டர் உயரமுள்ள வெள்ளி இரதமாக உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








