கோலாலம்பூர், செப்டம்பர்.22-
சமயப் பணியுடன் கல்வி மற்றும் சமூக உதவிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம், இவ்வாண்டில் இதுவரையில் 72 ஆயிரத்து 200 ரிங்கிட்டை கல்வி நிதிக்கும், இதர சமூகவியல் நிதிக்கும் வழங்கியுள்ளதாக அதன் தலைவர் டான் ஶ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தெரிவித்தார்.
தேவஸ்தானம், தான் கொண்டிருக்கின்ற சமூகக் கடப்பாட்டின் அடிப்படையில் இந்த நிதி உதவிகள் தொடரும் என்று டான் ஶ்ரீ நடராஜா உறுதி அளித்தார்.
ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 1 லட்சம் ரிங்கிட் சமூக சேவைகளுக்காக தேவஸ்தானம் செலவிட்டு வருகிறது. இவ்வாண்டு இதுவரை 72 ஆயிரத்து 200 ரிங்கிட்டை நிதியுதவியாக வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட 9 மாணவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரிங்கிட் கல்வி உதவி நிதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாணவிக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
இதைத் தவிர்த்து ஆலய வளர்ச்சிக்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கும் நிதிகள் வழங்கப்பட்டுள்ளது என்று பத்துமலை திருத்தலத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டான் ஶ்ரீ நடராஜா இதனைத் தெரிவித்தார்.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செயல்படுகின்ற சமய ஸ்தாபனமாகும்.
கோவில் பூஜைகள், திருப்பணிகள் உட்பட தெய்வ காரியங்களுக்கு மட்டுமே தேவஸ்தானத்தின் நிதிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இது தான் நீதிமன்றத்தின் உத்தரவாகும்.
இருப்பினும் தனக்கு இருக்கின்ற சமூக கடப்பட்டின் அடிப்படையில் தேவஸ்தனம் கல்விக்கும், சமூக நற்காரிகளுக்கும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது என்று டான் ஶ்ரீ நடராஜா தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்வில் தேவஸ்தான அறங்காவலரும் மஹிமா தலைவருமான டத்தோ என். சிவகுமார் உட்பட தேவஸ்தான அறங்காவலர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.