ஜார்ஜ்டவுன், ஜனவரி.05-
எதிர்வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி, உலகெங்கிலும் தைப்பூச திருவிழா அனுசரிக்கப்படவுள்ள நிலையில், இவ்வாண்டு பினாங்கிற்கு வருகை புரியவிருக்கும் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், கூட்டத்தை சீரான முறையில் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஆர். லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, பினாங்கு தைப்பூசத்தில் பங்கேற்றோரின் எண்ணிக்கை ஒரு மில்லியன் என போலீஸ் தரவுகளும் கூறும் நிலையில், இவ்வாண்டு தைப்பூச தினமானது வார இறுதியில் அனுசரிக்கப்படுவதால், பக்தர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டும் என்பது உறுதி என்றும் லிங்கஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், சென்னை – பினாங்கு இடையிலான நேரடி விமானச் சேவை தொடங்கப்பட்டதையடுத்து, இந்தியாவிலிருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மலை உச்சியில் உள்ள கோயிலுக்கு வயதான பக்தர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்வதற்காக, அறப்பணி வாரியமும், கோயில் நிர்வாகமும் இணைந்து சிறப்பு போக்குவரத்துச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தைப்பூச நாளில் அதிக கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல், பக்தர்கள், பாதுகாப்பாக வழிபாடுகளையும், விரதங்களையும் மேற்கொள்ள இச்சேவை உதவும் என்றும் லிங்கஸ்வரன் தெரிவித்துள்ளார்.








