ஜார்ஜ்டவுன், நவம்பர்.24-
பினாங்கு தண்ணீர்மலை, ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் நான்காவது மகா கும்பாபிஷேகம் நேற்று ஞாயிற்றுக்கிமை காலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழகம், பிள்ளையார்பட்டி, பிச்சை குருக்கள் தலைமையில் மிக நேர்த்தியாக நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேக விழாவில், சுமார் 5 ஆயிரம் பேர், திரளாக வந்து கலந்து கொண்டு சிறப்புச் சேர்த்தனர்.

கோலாகலமாக நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேக விழாவில் நிதித்துறை துணை அமைச்சரும், பினாங்கு, தஞ்சோங் எம்.பி.யுமான லிம் ஹுய் யிங், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும், பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான ஆர்எஸ்ஆர் ராயர், திருப்பணிக்குழு ஆலோசகர் டத்தோ ஸ்ரீ கே.குமரேந்திரா, ஆலய நிர்வாகத் தலைவர் குமார திரவியம் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டது பெருமிதம் அளித்துள்ளது என்று ஆர்எஸ்என் ராயர் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ஆலயத்தின் திருப்பணி, எட்டு மாத காலக் கட்டத்தில் நிறைவு பெற்று இந்த மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது மிக சிறப்புக்குரிய ஒன்றாகும் என்று ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேக திருப்பணி குழுவின் ஆலோசகர் டத்தோ ஸ்ரீ கே.குமரேந்திரா தெரிவித்தார்.
மேலும் இந்த மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற பொருள் உதவியும் பண உதவியும் வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் டத்தோ ஸ்ரீ கே.குமரேந்திராவுடன் இணைந்து ஆலயத் தலைவர் குமார திரவியம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பக்தர்கள் புடை சூழ நடைபெற்ற ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதோடு அனைவரும் ஸ்ரீ கணேசரின் ஆசியைப் பெற்றனர்.








