Oct 5, 2026
Thisaigal NewsYouTube

திருவாசக மாநாடு சிறப்பாக நடைபெற்றது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
திருவாசக மாநாடு சிறப்பாக நடைபெற்றது

மாணிக்கவாசகரின் திருவாசகத் தேனில் பக்திப் பரவசம்......!

மாணிக்கவாசகரின் அருள்வாக்கான திருவாசகத்தின் பெருமையையும், அதன் ஆன்மிகத் தேனையும் உலகறியச் செய்யும் வகையில் மலேசியாவின் முதல் திருவாசக மாநாடு பக்திப் பரவசத்துடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

பத்துகேவ்ஸ் சின்ஹா மண்டபத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற இம்மாபெரும் மாநாட்டிற்கு மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தலைமையேற்றார். மலேசிய நால்வர் மன்றமும் மலேசிய சிவனடியார் திருச்சபையும் இணைந்து மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

இயல், இசை, நாடகம் என முத்தமிழின் மூன்று வடிவங்களிலும் நடைபெற்ற மாநாட்டில், திருவாசகத்தின் சிறப்பு, மாணிக்கவாசகரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது அருள்நெறி குறித்து சிறப்புரைகள் இடம்பெற்றன.

மாநாட்டின் சிறப்பு அம்சமாக தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த அறன் பணி அறக்கட்டளையின் தலைவர் சைவ சித்தாந்தப் பேரோளி, ஞான ஆசிரியர் பவானி அ. தியாகராஜன், “திருவாசகம் என்ற தேன்” என்ற தலைப்பில் மாணிக்கவாசகர் வரலாற்றையும், திருவாசகத்தின் மகத்துவத்தையும் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அற்புதமாக எடுத்துரைத்தார்.

மாநாட்டிற்கு தலைமை ஏற்ற டத்தோ ஸ்ரீ எம். சரவணன், திருவாசக மாநாடு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும், ஆண்டுதோறும் மாநாடு நடத்தப்பட்டால் அதற்கான செலவினத்தைத் தாம் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார்.

மாநாட்டு ஏற்பாட்டுக் குழுப் பொறுப்பாளர்களில் ஒருவரும் மலேசிய நால்வர் மன்றத்தின் தலைவருமான பாலகிருஷ்ணன் கந்தசாமி கூறுகையில், மலேசியாவில் முதன்முறையாக நடைபெற்ற இந்தத் திருவாசக மாநாட்டின் முக்கிய நோக்கம், இந்நாட்டில் வாழும் தமிழர்கள் மாணிக்கவாசகரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதுடன், திருவாசகத்தின் பெருமையையும் அதன் ஆன்மிகச் சிறப்பையும் அறிந்து கொள்ளச் செய்வதே என்றார்.

வருங்காலங்களில் இளைய தலைமுறையினரையும் மக்களையும் ஆன்மிகப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் இது போன்ற ஆன்மிக நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று மாநாட்டு ஏற்பாட்டுக் குழுப் பொறுப்பாளர்களில் ஒருவரும் மலேசிய சிவனடியார் திருச்சபையின் தலைவருமான மாணிக்கம்மாள் தெரிவித்தார்.

மாணிக்கவாசகரின் அருள்வாக்கில் தோய்ந்து, திருவாசகத்தின் இனிமையை உணர்ந்த பக்தர்களுக்கு ஆன்மிகப் பரவசத்தை அளித்த இம்மாநாடு, மலேசியத் தமிழர்களிடையே திருவாசகத்தின் பெருமையை மேலும் கொண்டு சேர்க்கும் நிகழ்வாக அமைந்தது.

மாணிக்கவாசகரின் திருவாசகம் ஒலிக்கட்டும்; தமிழர் உள்ளங்களில் இறையருள் பெருகட்டும்!

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in ஆன்மிகம் →