ஈப்போ, டிசம்பர்.10-
இந்து ஆலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேகங்களிலும், ஆலயங்களின் பல விஷேச நிகழ்வுகளிலும் உள்நாட்டு அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பேரா ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் வலியுறுத்தியுள்ளாரே தவிர வெளிநாட்டு அர்ச்சகர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்று மலேசிய இந்து அர்ச்சகர் சங்கம் தெளிவுபடுத்தியது.
இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து அரச்சகர்களைத் தருவிக்க தடையை விதிக்க வேண்டும் என்று டத்தோ சிவநேசன் கூறவில்லை. மாறாக, அவசியம் தேவைப்பட்டால் உள்நாட்டு மலேசிய அர்ச்சகர் சங்கத்தின் ஆதரவுடன் வெளிநாடுகளிலிருந்து அர்ச்சகர்களைத் தருவிக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார்.
டத்தோ சிவநேசன் கூறிய கூற்றைத் தவறாகப் புரிந்து கொண்டு, வியாக்கியானப்படுத்தி, அறிக்கை வெளியிட்டு வருவது, மலேசிய அர்ச்சகர் சங்கத்திற்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று அச்சங்கத்தின் தேசியத் தலைவர் சிவஸ்ரீ நித்தியனந்த குருக்கள் கூறினார்.
அண்மைய காலமாக பேரா மாநிலத்தில் பல ஆலயங்களில் கும்பாபிஷேகங்கள் நடந்துள்ளன. அவற்றை உள்நாட்டு அர்ச்சகர்கள் சிறப்பான முறையில் வழி நடத்தி வைத்துள்ளதை விழாவில் கலந்துக் கொண்ட டத்தோ சிவநேசனும் நேரில் பார்த்துள்ளார்.
அதனை மையமாக வைத்துதான் கடந்த வாரம் தைப்பிங், அவுலோங் ஸ்ரீ சிவன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் உள்நாட்டு அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கும் பொருட்டு டத்தோ சிவநேசனின் உரையும் இடம் பெற்றது.
டத்தே சிவநேசன், வெளிநாட்டு அர்ச்சகர்களைப் புறக்கணிக்கவில்லை. மாறாக, அவசியம் ஏற்படும் பட்சத்தில் அவர்களை எங்களின் ஆதரவுடன் அழைக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார் என்று சிவஸ்ரீ நித்தியனந்த குருக்கள் விளக்கம் அளித்துள்ளார்.
ஆகவே இந்த விவகாரத்தை யாரும் சர்சையாக்க வேண்டாம் என்று ஈப்போவில் உள்ள பேரா மாநில இந்து சங்க அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சிவஸ்ரீ நித்தியானந்த குருக்கள் இந்த விளக்கத்தைத் தந்தார்.
பேரா மாநில இந்து சங்கத்தின் தலைவர் பொன். சந்திரன் கூறுகையில், உள்ளூர் அர்ச்சர்களைப் பயன்படுத்துவது மூலம் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்க முடியும் என்று டத்தோ சிவநேசன் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டார்.
பேரா இந்து அர்ச்சகர் சங்கத் தலைவர் க. டினேஷ்குமார் குருக்கள் பேசுகையில், அர்ச்சகர் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் சமய காரியங்களுக்கும் நிறைய உதவிகளைச் செய்து வரும் டத்தோ சிவநேசனின் சேவையை வெகுவாகப் பாராட்டினார்.
இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேரா மாநில இந்து சங்கம், பேரா மாநில இந்து அர்ச்சகர்கள் சங்கம், பேரா மாநில இந்து தர்ம மாமன்றம் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.








