கோலாலம்பூர், ஜனவரி.08-
இவ்வாண்டு, பஞ்சாங்கத்தின் படி, பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் என மலேசிய இந்து சங்கம் அறிவித்துள்ளது.
மங்களகரமான தை மாதத் தொடங்கத்தின், முதல் நாளில் பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பஞ்சாங்கத்தின் படி, இவ்வாண்டு அந்நாளானது, ஜனவரி 15-ஆம் தேதி அனுசரிக்கப்படுவதாக மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டி. கணேசன் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு, ஜனவரி 14-ஆம் தேதி இரவு 9.23 மணியளவில், தை பிறப்பதால், பொங்கல் பண்டிகையைக் கொண்டாட அந்த நேரம் ஏதுவாக இருக்காது என்றும் டி. கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, ஜனவரி 15-ஆம் தேதி காலை பொங்கல் வைத்து வழிபடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், ஜனவரி 15-ஆம் தேதி அதிகாலை 6.10 முதல் 7.20 மணியளவிலும், அதனையடுத்து, 9.10 முதல் 11.30 மணியளவிலும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட ஏதுவான மங்களகரமான நேரம் என்றும் டி. கணேசன் தெரிவித்துள்ளார்.








