ஈப்போ, டிசம்பர்.05-
பேராக் மாநிலத்திலுள்ள ஆலயங்கள் சட்டச் சிக்கல்களை எதிர்நோக்காமல் இருக்க , ஆலயங்களை, ஆலயத்தின் பெயரிலேயே அரசாங்கப் பதிவேட்டில் ஆவணப்படுத்துமாறு பேராக் இந்திய சமூக நலத்துறை, சுகாதாரம், மனிதவளம் மற்றும் ஒற்றுமை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் அறிவுறுத்தினார்.
தற்போது தஞ்சோங் ரம்புத்தான் சமயபுர ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் பெயர் மாற்றம் விவகாரத்திற்குத் தீர்வு காணப்பட்டிருப்பதை டத்தோ சிவநேசன் சுட்டிக் காட்டினார்.
முன்பு அந்த ஆலயம், இரு அறங்காவலர்கள் பெயர்களில் இருந்துள்ளதாக அரசாங்கப் பதிவேட்டின் குறிப்புகள் காட்டுகின்றன. ஆனால், ஆலய நிர்வாகத்தினர் முறையாக விண்ணப்பம் செய்ததன் விளைவாக தற்போது ஆலயத்தின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாக டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.
இதே போன்று ஈப்போ ஃபேர் பார்க்( Fair Park) ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயமும் அரசாங்கப் பதிவேட்டில் இடம் பெற்றுவிட்டது.
ஆலயங்கள் அறங்காவலர்களின் பெயர்களின் இருக்கும் பிரச்னை நாடு முழுவதுமுள்ள ஆலயங்கள் எதிர்நோக்கி வருகின்றன. இதற்குத் தீர்வு காண சம்பந்தப்பட்ட மாநிலங்களின் உள்ள இந்திய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆலய நிர்வாகங்களுக்கு உதவிட முன் வர வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.








