ஷா ஆலாம், ஜனவரி.13-
இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்துள்ளார்.
பத்துமலை உட்பட தைப்பூச விழாவைக் கொண்டாடும் திருமுருகன் ஆலயங்களுக்குச் சென்ற சம்பந்தப்பட்ட ஆலயப் பொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டு மானியம் ஒப்படைக்கப்படும் என்று பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
அதே வேளையில் சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் வரும் ஜனவரி 31ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு மேல் பத்துமலை வளாகத்தில் பந்தல் அமைத்து பக்தர்களுக்குச் சுவையான அன்னதானமும் வழங்கப்படும்.
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி உட்பட சிலாங்கூர் மாநில சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரவு 8.00 மணிக்கு மேல் சிறப்பு வருகை புரிகிறார்கள் என்று ஷா ஆலாமில் உள்ள தமது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பாப்பாராய்டு இதனைத் தெரிவித்தார்.
தவிர சிலாங்கூர் மாநில அளவிலான 2026 ஆம் ஆண்டு பொங்கல் விழா, இம்முறை அம்பாங்கில் நடைபெறவிருப்பதையும் பாப்பாராய்டு அறிவித்தார்.
வரும் ஜனவரி 17 ஆம் தேதி சனிக்கிழமை பொங்கல் விழா அம்பாங்கில் இரண்டு முக்கிய இடங்களில் நடைபெறும். காலையில் அம்பாங் ஜெயா, கம்போங் தாசிக் பெர்மாய் (Kampung Tasik Permai) பகுதியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலும், மாலையில், அம்பாங்கில் உள்ள டத்தோ அகமட் ரசாலி மண்டபத்திலும் (Dewan Dato' Ahmad Razali) நடைபெறும் என்றார்.
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் காலையிலிருந்து மாலை வரை கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பலவகையான போடட் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று பாப்பாராய்டு விவரித்தார்.
பொங்கல் விழாவின் உச்சமாக மாலை 7 மணிக்கு டத்தோ அகமட் ரசாலி மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேர் வரை வருகை புரிவார்கள் என்று பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு பிரமுகராக கலந்து கொள்வார் என்று பாப்பாராய்டு தெரிவித்தார்.








