கோலாலம்பூர், அக்டோபர்.02-
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளியை முன்னிட்டு அமைக்கப்பட்ட கூடாரங்கள் பலத்த காற்றில் சரிந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் நீலநிற கடைகள் முற்றாக அகற்றப்படும். அதற்கு பதிலாக வெள்ளை நிறத்திலான மைக்கி டேங் கூடார கடைகள் அமைக்கப்படும் என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சலேஹா முஸ்தாபாவின் சிறப்புப் பணிக்கான அதிகாரி சிவமலர் தெரிவித்தார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா தீபாவளிக் கடை விவகாரம் தொடர்பில் சிவமலர் இன்று பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவிற்கு நேரடி வருகை தந்து நிலைமையைப் பார்வையிட்டார்.

தீபாவளியை முன்னிட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் வியாபாரிகள், வியாபாரம் செய்ய கோலாலம்பூர் மாநகர் மன்றம் நீல நிறத்திலான கடைகளை அமைத்துக் கொடுத்தது. சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டு அங்கு இந்த கடைகள் போடப்பட்டதால் வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது. இக்கடைகளால் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் மக்கள் வருகை தர மாட்டார்கள் என்று வியாபாரிகள் அச்சம் தெரிவித்தனர்.