ஷா ஆலாம், ஜனவரி.06-
பத்துமலை திருத்தலத்தில் 272 படிகளைக் கடக்க சிரமப்படும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நீண்ட காலக் கனவான மின்படிக்கட்டு திட்டமான Escalator, தற்போது ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கடந்த ஆண்டு தைப்பூசத்தின் போது சிலாங்கூர் மாநில அரசின் ஆதரவுடன் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது முடங்கிக் கிடப்பதற்கு மாநில அரசு காரணமல்ல, மாறாக, பத்துமலை திருத்தலத்தை நிர்வகித்து வரும் கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானம் சமர்ப்பித்த விண்ணப்பத்தில் உள்ள குளறுபடிகளே காரணம் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த Escalator திட்டம், முடங்கி கிடப்பதற்கும், அனுமதி மறுக்கப்பட்டதற்கும், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு முன்வைத்துள்ள விளக்கம், தற்போது ஆன்மீகப் பொதுவெளியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் நிதியிலும், பக்தர்களின் காணிக்கையிலும் இயங்கும் ஒரு பொதுத் திருத்தலத்தின் இந்த Escalator திட்டம், 'தனிநபர்' ஒருவரின் பெயரில் உரிமம் கோரி விண்ணப்பிக்கப்பட்டது ஏன்? இது நிர்வாகத்தின் கவனக்குறைவா அல்லது திட்டமிட்ட நகர்வா என்ற கேள்வி பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு தெரிவித்துள்ளார்.
ஒரு பொதுச் சொத்தில் குறிப்பாக பொதுமக்கள் அளிக்கக்கூடிய காணிக்கையால் செயல்படக்கூடிய ஒரு திருத்தலத்தில் தனிநபர் பெயரில் மின்படிக்கட்டு அமைக்கப்பட்டால், வருங்காலத்தில் அதன் முழுக் கட்டுப்பாடும், கட்டண நிர்ணயமும் அந்தத் தனிநபரின் வசமே சென்றுவிடும்.
முருகப் பெருமானைத் தரிசிக்க வரும் எளிய பக்தர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம், ஆலயத்தின் வளர்ச்சிக்குச் செல்லாமல் தனிநபரின் லாபமாக மாற சிலாங்கூர் மாநில அரசு எப்படி அனுமதிக்கும்? அரசின் இந்த நிராகரிப்பு, பொதுச் சொத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு நியாயமான நடவடிக்கை என்பதை எவரும் மறுக்க முடியாது என்பது பாப்பாராய்டு வாதிடுகிறார்.
ஆலயம் என்பது தனிப்பட்ட நபர்களின் சொத்து அல்ல; அது ஒட்டுமொத்தப் பக்தர்களுக்கும் சொந்தமானது. ஒரு மிகப் பெரிய ஆன்மீக அமைப்பான, நாட்டின் தாய்க் கோயிலின் வாசலாகத் திகழும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம், இவ்வளவு முக்கியமான ஒரு திட்டத்தை தனது அமைப்பின் பெயரிலோ அல்லது ஒரு அறக்கட்டளையின் பெயரிலோ விண்ணப்பிக்காமல், தனிநபர் பெயரில் விண்ணப்பித்திருப்பது நிர்வாகச் சீர்கேட்டின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது என்று பாப்பாராய்டு குற்றஞ்சாட்டுகிறார்.
முக்கியமாக, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி இத்திட்டத்திற்கு ஆரம்பத்திலேயே 'பச்சைக் கொடி' காட்டி, முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருந்தார். அரசின் தரப்பில் அனைத்து கதவுகளும் திறந்தே இருந்தன. ஆனால், ஒரு பொதுச் சொத்தில் தனிநபர் பெயரில் மின்படிக்கட்டு அமைக்கப்பட்டால், வருங்காலத்தில் அதன் முழுக் கட்டுப்பாடும், கட்டண நிர்ணயமும் அந்தத் தனிநபரின் வசமே சென்றுவிடும் என்ற ஆபத்து உள்ளது.
எனவே, மக்களின் பொதுச் சொத்து தனிநபர் உடமையாவதைத் தடுக்கும் வகையில் மாநில அரசு எடுத்துள்ள இந்த முடிவு, சட்டரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் மிகச் சரியானது. அரசு காட்டிய நேர்மையைச் சிறுமைப்படுத்தும் வகையில், நிர்வாகத் தவற்றை மறைத்து அரசு மீது பழியைப் போடுவது எந்த வகையிலும் நியாயமற்றது என்று பாப்பாராய்டு கூறுகிறார்.
ஒரு மிகப் பெரிய ஆன்மீக அமைப்பான கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம், இவ்வளவு முக்கியமான ஒரு திட்டத்தை தனது அமைப்பின் பெயரிலோ அல்லது ஒரு அறக்கட்டளையின் பெயரிலோ விண்ணப்பிக்காமல், தனிநபர் பெயரில் விண்ணப்பித்திருப்பது நிர்வாகச் சீர்கேட்டின் உச்சமாகவே பார்க்கப்படுவதாக பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
சிலாங்கூர் அரசின் முக்கிய கேள்வி, இந்த மின்படிக்கட்டுத் திட்டம், "ஏன் தனிநபர் பெயரில் விண்ணப்பம் செய்யப்பட்டது?" என்ற கேள்விக்குத் தெளிவான விளக்கத்தை அளிக்க தேவஸ்தானம் கடப்பாடு கொண்டுள்ளது.
எங்களைப் பொறுத்தவரை, பத்துமலை முருகனின் அருளைப் பெற வரும் ஏழை, எளிய மற்றும் முதிய பக்தர்களின் நலனே முக்கியம். தேவஸ்தானம் இனியாவது பிடிவாதத்தைத் தளர்த்தி, சட்டப்பூர்வமான விதிமுறைகளைப் பின்பற்றி, ஆலயத்தின் பெயரிலேயே புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து மின்படிக்கட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த முன்வர வேண்டும். இதுவே சிலாங்கூர் மாநில அரசின் பதிலாகும் என்று பாப்பாராய்டு குறிப்பிட்டுள்ளார்.








