Jan 9, 2026
Thisaigal NewsYouTube
பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா
ஆன்மிகம்

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

Share:

கோலாலம்பூர், ஜனவரி.08-

நாட்டின் தாய்க் கோயிலான கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் கீழ் இயக்கும் பத்துமலைத் திருத்தலத்தில் நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா வன்மையாக மறுத்தார்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானம் என்பது 1930-ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பின் உத்தரவின் கீழ் இயங்கும் ஓர் அறக்கட்டளை அமைப்பாகும். இது சங்கப் பதிவு அலுவலகமான ஆர்ஓஎஸ்ஸில் பதிவு செய்யப்பட்ட அமைப்பு அல்ல என்பதால், தேவஸ்தானத்தின் தலைவர் என்ற முறையில் தனது பெயரில் விண்ணப்பம் செய்வது சட்டப்படியான நடைமுறையாகும் என்று டான் ஶ்ரீ நடராஜா விளக்கம் அளித்தார்.

நகரும் மின்படிக்கட்டு சர்ச்சை தொடர்பில் இன்று பத்துமலைத் திருத்தல அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டான் ஶ்ரீ நடராஜா இந்த விளக்கத்தைத் தந்தார். தேவஸ்தானத்தின் வழக்கறிஞர் டத்தோ செல்வம் மூக்கையா முன்னிலையில் நடைபெற்ற இந்தச் செய்தியாளர்கள் கூட்டத்தில் நகரும் மின்படிக்கட்டுத் திட்டம் தொடர்பாக தாங்கள் சமர்ப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை டான் ஶ்ரீ நடராஜா மறுத்தார்.

விண்ணப்பத்தில் இணைக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை மாநில அரசாங்கம் ஆலோசனையாக வழங்கியதாக டான் ஶ்ரீ நடராஜா தெளிவுபடுத்தினார். குறிப்பாக, தேவஸ்தானத்திற்கு ஆர்ஓஎஸ் பதிவு இல்லாததால், தேவஸ்தானம் பின்பற்றி வருகின்ற நடைமுறையைப் பின்பற்றி விண்ணப்பத்தில் சேர்க்க வேண்டியவற்றை இணைக்குமாறு அறிவுறுத்தியதாக டான் ஶ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

தேவஸ்தானத் தலைவர் என்ற முறையில் தனது பெயரில் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது, தன்னுடைய தன்னிச்சையான முடிவு அல்ல என்றும், தேவஸ்தானத்தின் 62 அறங்காவலர்களின் முழுமையான ஆதரவு மற்றும் கையெழுத்துடனேயே சமர்ப்பிக்கப்பட்டது என்றும் டான் ஶ்ரீ நடராஜா சுட்டிக் காட்டினார்.

இது ஒரு தொழில்நுட்பச் சிக்கல் மட்டுமே தவிர, விதிமீறல் அல்ல. இருந்த போதிலும் இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் வரும் ஜனவரி 21 ஆம் தேதி தீர்ப்பு வரும் வரை அது குறித்து தாம் அதிகமாகப் பேச முடியாது என்பதையும் டான் ஶ்ரீ நடராஜா விளக்கினார்.

அதே வேளையில் பத்துமலை நகரும் மின்படிக்கட்டுத் திட்டம் தொடர்பான விண்ணப்பத்தின் உண்மை நிலை தெரியாமல் பேசியிருக்கும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டுவின் அறிக்கை உண்மையிலேயே மன வேதனை அளிக்கிறது என்று டான் ஶ்ரீ நடராஜா தெரிவித்தார்.

இதற்கான விண்ணப்பம் தனிநபரில் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாகக் கூறி, தனக்கும், தேவஸ்தானத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு, தன்னுடைய செயலுக்காக 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி, அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டு இருப்பதையும் செய்தியாளர்கள் கூட்டத்தில் டான் ஶ்ரீ நடராஜா சுட்டிக் காட்டினார்.

பத்துமலை முருகன் திருத்தலம் என்பது பொது சொத்து. தனிநபருக்குச் சொந்தமானது அல்ல. மேலும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம், நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் இயங்குகிறது.

எந்தவொரு நடவடிக்கையும், முடிவும் சட்டத் துறை தலைவரின் அனுமதியோடுதான் மேற்கொள்ளப்படும்.

பத்துமலை நிர்வாகம் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று டான்ஸ்ரீ நடராஜா நினைவுறுத்தினார். இத்தகைய வதந்திகள் தேவஸ்தானத்திற்குக் களங்கத்தையும், சமூக ஒற்றுமைக்குப் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதால், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் பின்பற்றுமாறு பக்தர்களைக் கேட்டுக் கொண்டார்.

Related News

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பத்துமலை நகரும் மின் படிக்கட்டு சர்ச்சை: நாளை மறுநாள் தேவஸ்தானம் அதிரடி விளக்கம்

பத்துமலை நகரும் மின் படிக்கட்டு சர்ச்சை: நாளை மறுநாள் தேவஸ்தானம் அதிரடி விளக்கம்

பத்துமலை மின்படிக்கட்டுத் திட்டம்: பக்தர்களின் வசதியா? தனிநபரின் ஆதாயமா? தேவஸ்தானத்தை நோக்கிப் பாய்ந்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு

பத்துமலை மின்படிக்கட்டுத் திட்டம்: பக்தர்களின் வசதியா? தனிநபரின் ஆதாயமா? தேவஸ்தானத்தை நோக்கிப் பாய்ந்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு

பினாங்கு தைப்பூசத்திற்கு மில்லியனுக்கும் அதிகமானோர் வருகை புரிய வாய்ப்பு

பினாங்கு தைப்பூசத்திற்கு மில்லியனுக்கும் அதிகமானோர் வருகை புரிய வாய்ப்பு

அர்ச்சகர் விவகாரத்தை யாரும் சர்ச்சையாக்க வேண்டாம் மலேசிய இந்து அர்ச்சகர் சங்கம் வலியுறுத்து

அர்ச்சகர் விவகாரத்தை யாரும் சர்ச்சையாக்க வேண்டாம் மலேசிய இந்து அர்ச்சகர் சங்கம் வலியுறுத்து

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கா... | Thisaigal News