கோலாலம்பூர், ஜனவரி.12-
திருக்கைலாயப் பரம்பரை மெய் கண்ட சந்தானம் பேரூர் ஆதீனம், மலேசியா சுந்தர சிவயோக ஆசிரமம் மற்றும் மலேசியா சிவனடியார் திருச்சபை ஏற்பாட்டில் வருகின்ற ஜனவரி 24 ஆம் தேதி சனிக்கிழமை தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் அருளாசியுடன் கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது.
இவ்விழா காலை 7 மணி தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவடையும். திருவாசகம் முற்றோதல் என்பது மாணிக்கவாசகப் பெருமான் அருள சிவபெருமான் கைப்பட எழுதிய நூலை ஒரே நாளில் 658 பாடல்களைப் பாடி நிறைவு செய்யும் ஒரு பெரும் கூட்டு வழிபாடு ஆகும்.

இவ்விழாவில் மலேசியாவில் இருந்து அடியார் பெருமக்கள் கலந்து கொள்ள இருக்கின்றார்கள். அதுமட்டுமின்றி 7 கொங்கு நாட்டு சிவத் திருத்தல பயணமும் மேற்கொள்ள இருக்கின்றார்கள். ஆகையால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொண்டு மலேசியாவில் உள்ள அடியார்களும் தமிழ்நாட்டில் உள்ள அடியார் பெருமக்களும் இத்திருவாசகம் முற்றோதலில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.








