மலாக்கா, அக்டோபர்.28-
மலாக்கா, அலோர் காஜா, ஜாலான் சிம்பாங் அம்பாட், கம்போங் கெமுஸ், பழைய நானிங் திருக்கோவிலான ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் கந்த சஷ்டி விரத விழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்வு நேற்று இரவு பக்தர்கள் புடை சூழ வெகு விமரிசையாக நடைபெற்றது.
பக்தர்களால் பெரிதும் போற்றப்படும் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் கந்த சஷ்டி விரத விழா கடந்த 22 ஆம் தேதி சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்களுடன் துவங்கியது.

சஷ்டி விழா தொடங்கியது முதல் ஏராளமான பக்தர்கள் விரதம் எடுத்தனர். நேற்று சூரசம்ஹார நிகழ்வையொட்டி ஆலயத்தில் பக்தர்கள்,சஷ்டி கவசத்தை 36 முறை பாராயணம் செய்தனர். பக்தி பாடல்களையும் பாடி நிகழ்விற்குச் சிறப்பு சேர்த்தனர்.
முன்னதாக பட்டாடைகள், ஆபரணங்கள், மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள் காட்சி தந்த முருகப் பெருமானுக்கு, ஆலயத்தின் பிரதம குருக்கள், ஆஞ்சநேய உபாசகர் ஈசான சிவம் சிவஸ்ரீ கு. நவதாஸ சிவாச்சாரியார் தலைமையில் 6 குருமார்களைக் கொண்டு, சிறப்பு அர்ச்சனைகள், அபிஷேகங்கள், தீபாரதனைகள் நடைபெற்றன.
கந்த சஷ்டி விரத விழா நிகழ்வின் உச்சமாக சூரபத்மனை முருகப்பெருமான், வேல் கொண்டு வதம் செய்யும் காட்சியைச் சித்தரிக்கும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற முழக்கம் எதிரொலிக்க பக்தர்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.
இன்று அக்டோபர் 28 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு மணி 7.28 க்கு தொடங்கி 8.33 வரை திருக்கல்யாண உற்சவம், ஆலய திருமண மண்டபத்தில் வெகுச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. இத்திருக்கல்யாண வைபவத்தில் அடியார் பெருமக்கள் திரளாக, தம்பதிகளாகக் கலந்து கொண்டு குடும்பம் விருத்தியடைய எல்லா வல்ல இறைவனின் அருளாசியை பெற்றுய்யுமாறு ஆலயம் சார்பாக பிரதம குருக்கள் சிவஸ்ரீ கு. நவதாஸ சிவாச்சாரியார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிகழ்வுகள் யாவும் திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் அவர்களின் ஆலோசனையின்படி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.








