சிரம்பான் செனாவாங், தாமான் துவாங்கு ஜஃப்பாரில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தானத்தில், திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் தெய்வீகச் சிறப்பையும், அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தின் மகத்துவத்தையும் நினைவுகூரும் வகையில், இவ்வாலயத்தில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மூலஸ்தானத்தில் மகா அபிஷேகத்துடன் தொடங்கிய விழாவில், அர்த்தநாரீஸ்வரர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளும், தொடர்ந்து சிறப்புப் பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றன. பக்தர்கள் இறைவனை மனமுருகி வழிபட்டு அருளாசி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து, பரணி தீபம் ஏற்றப்பட்டு, அர்த்தநாரீஸ்வரர் சுவாமி கோயிலின் உள்வீதி வலம் வரும் வைபவம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் இறைவனின் திருநாமங்களை உச்சரித்து வழிபட்டனர்.

பின்னர், அர்த்தநாரீஸ்வரர் சுவாமி முன்னிலையில் 1,008 தீப விளக்குகள் ஏற்றப்பட்டு, மகா தீபம் சிறப்புப் பூஜைகளுடன் ஏற்றப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் ஒருசேர ஒளிர்ந்த அந்தத் தெய்வீகக் காட்சி, ஆலயத்தையே ஒளிமயமாக்கியதுடன், அங்கு திரண்டிருந்த பக்தர்களிடையே ஆன்மிகப் பரவசத்தையும் ஏற்படுத்தியது.

விழாவின் மற்றொரு சிறப்பு அம்சமாக, ஆலயக் கொடிமரத்திலும் தீபாராதனை ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

தொடர்ந்து, பக்தர்கள் முன்னிலையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. விண்ணை முட்டிய தீப்பிழம்புகளும், தீபங்களின் ஒளியும் இணைந்து கார்த்திகைத் திருநாளின் ஆன்மிகச் சிறப்பை மேலும் மெருகூட்டின.

திருவண்ணாமலையில் மலைமீது ஏற்றப்படும் மகாதீபத்தை நேரில் தரிசிக்க இயலாத மலேசிய வாழ் பக்தர்களுக்கு, அதே தெய்வீக உணர்வையும் இறையருள் அனுபவத்தையும் தங்கள் ஊரிலேயே பெறுவதற்கான ஒரு சிறப்பான வாய்ப்பாக இவ்விழா அமைந்தது. குறிப்பாக, அர்த்தநாரீஸ்வரர் சுவாமியின் திருக்கோலத்தில் இறைவனைத் தரிசித்து, தீப வழிபாட்டில் பங்கேற்றது பக்தர்களுக்கு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

இவ்விழாவில் 700-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர். விழாவின் நிறைவாக, அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.








