கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் பத்துமலைத் திருத்தலத்தில் மாபெரும் முப்பெரும் விழா, வரும் நவம்பர் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
பத்துமலை அலுவலக வளாகத்திற்கு அருகில் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும் இந்த முப்பெரும் விழா, தேவஸ்தானத் தலைவர் டான் ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையில் நடைபெறும்.
காலை முதல் அமர்வில் தேவஸ்தானத்தின் மகளிர் குழுத் தலைவி புவான்ஸ்ரீ டத்தின் மல்லிகா நடராஜா, குத்துவிளக்கேற்றி நிகழ்வை தொடக்க வைப்பார். தொடர்ந்து மேளதாள நாதஸ்வர கலைஞர்களின் மங்கள வாத்தியம், பிரபல பின்னணி பாடகர் செந்தில்தாஸின் இன்னிசை நிகழ்ச்சி, புலவர் மா. இராமலிங்கம் மற்றும் அவர்தம் குழுவினரின் பட்டிமன்றம் நடைபெறும்.
மதிய உணவுக்கு பிறகு நாட்டியாஞ்சலி, நகைச்சுவைப் பட்டிமன்றம், தேவஸ்தானத்தின் நூல் நிலையத் திறப்பு விழா நடைபெறும். அதைத் தொடர்ந்து “கடாரம் கொண்டான்” நூல் வெளியீடு மற்றும் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணனின் சிறப்புரையும் இடம் பெறும் என்று இன்று பத்துமலைத் திருத்தலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டான் ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.
இந்த முப்பெரும் விழாவில் திருக்குறள் கணினி பெட்டகத் திறப்புவிழாவும் நடைபெறும். இந்நிகழ்வில் மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளும்படி டான் ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.
திருக்குறள் கணினிப் பெட்டகத்தை தேவஸ்தானத்தின் அறங்காவலரும், மராமத்துப் பகுதிப் பொறுப்பாளருமான டத்தோ ந. சிவகுமார் அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார் என்று டான் ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.








