புக்கிட் கெமுனிங், அக்டோபர்.28-
சிலாங்கூர், ஜாலான் புக்கிட் கெமுனிங் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் நிலப் பிரச்சினைக்கு நல்ல முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது. புதிய இடத்திற்கு ஆலயத்தை இடம் மாற்றம் செய்வது வாயிலாக இதற்கு ஓர் இணக்கம் காணப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ங் சூ லிம் அலுவலகத்தில் பழைய கோவில் பிரதிநிதிகளுக்கும், புதிய கோவில் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் விளைவாக இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தெரிவித்தார்.

அத்துடன், பழைய இடத்திலிருந்து புதிய இடத்திற்கு ஆலயத்தை இடம் மாற்றம் செய்வதற்கான முழுச் செலவையும் ஏற்றுக் கொள்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் சம்மதித்துள்ளனர். நேற்று தெய்வச் சிலைகள் பாதுகாப்பாக இடம் மாற்றும் பணியும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்றும் பிரகாஷ் குறிப்பிட்டார்.

இதனிடையே அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் நிலப் பிரச்னைக்கு நல்ல முறையில் தீர்வு காண்பதற்கு பெரும் உறுதுணையாக இருந்த ஆட்சிக்குழு உறுப்பினர் ங் சூ லிம் அலுவலகத்திற்கும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதனுக்கும் MPP Zon 14 ஷா ஆலாம் மாநகர் மன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரிக்கும், சிலாங்கூர் இந்திய சமூகத் தலைவருக்கும் ஆலயப் பொறுப்பாளர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.








