கோலாலம்பூர், அக்டோபர்.02-
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் நவராத்திரி விழாவையொட்டி பத்தாம் நாள் விஜயசதமி விழா, நேற்று அக்டோபர் முதல் தேதி புதன்கிழமை கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காடிக்காரர்கள் அம்பு போடும் உபயத்தையொட்டி உபய நாட்டாண்மை சி.தர்மலிங்கம், உபயப் பிரதிநிதிகள் எம். பூபாலன், எம். விக்னேசன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேவஸ்தானத்தின் பிரதான குருக்களான சிவகுமார் பட்டர் தலைமையில் அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. நடன நிகழ்ச்சிகளும் படைக்கப்பட்டன. விழாவின் உச்சமாக சிறப்புப் பூஜைக்குப் பின்னர் சுவாமி உள்வீதி ஊர்வலம் வந்து அம்பு போடும் நிகழ்வு நடைபெற்றது. சிவகுமார் பட்டர், இந்நிகழ்வை முன்னின்று நடத்தினார். தீபாரதனைக்குப் பின்னர் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.