ஈப்போ, செப்டம்பர்.20-
இந்த நாட்டில் உள்ள பல ஆலயங்களின் விஷேசங்கள், குறிப்பாக ஆலய கும்பாபிஷேங்களை நடத்த உள்நாட்டு அரச்சகர்கள் தலைமையில் வழி நடத்தப்பட வேண்டும் என்று பேரா மாநில இந்திய விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஆ. சிவநேசன் வலியுறுத்தியுள்ளார்.

பேரா மாநிலத்தில் உள்ள ஆலயங்களில் கும்பாபிஷேகங்கள் நடத்த போதிய அரச்சகர்களின் ஆள் பலம் உள்ளது என்று இந்து அரச்சகர்கள் சங்கம் தம்முடைய கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக சிவநேசன் குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள ஆலயங்களில் அர்ச்சனைகள், சமய காரியங்களை நடத்த போதிய அனுபவம் பெற்ற அர்ச்சகர்கள் நிறைய பேர் உள்ளனர்.

அவர்களை வைத்து சமயப் பணிகளை மேற்கொள்வதற்குரிய வாய்ப்புகளை ஆலய நிர்வாகங்கள் வழங்க வேண்டும் என்று சிவநேசன் கேட்டுக் கொண்டார்.

பேரா மாநிலத்தில் உள்ள ஆலயங்களுக்கு குறிப்பாக கும்பாபிஷேகங்கள் நடப்பதற்கு பேரா மாநில அரசிடமிருந்து நிதி பெற்று உதவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கு இந்தியாவில் இருந்து வரவழைப்படும் அரச்சகர்களுக்கு ஆலயங்கள் அதிகமான நிதிகளை வழங்குவதற்கு பதில் குறைந்த செலவில் உள்நாட்டு அரச்சகர்களை வைத்து கும்பாபிஷேகங்களை நடத்தலாம என்று சிவநேசன் ஆலோசனை கூறினார்.

பேரா மாநில இந்து அரச்சகர் சங்கமும் , கம்போங் கபாயாங் சிவசுப்பிரமணியர் ஆலயமும் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி யாகம் நிகழ்வைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான சிவநேசன் இதனைத் தெரிவித்தார்.

பேரா மாநிலத்தில் சிறப்பான முறையில் சமயப் பணிகளை நடத்தி வரும் இந்து அர்ச்சகர் சங்கம், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மாபெரும் கல்வி யாகத்தை நடத்தியிருப்பதுடன், 12 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதியை வழங்கியுள்ளது. அர்ச்சகர் சங்கத்திற்கு 25 ஆயிரம் ரிங்கிட் நிதியை வழங்குவதாக சிவநேசன் அறிவித்தார்.

இந்த நிகழ்வில் முன்னதாக தலைமையுரை ஆற்றிய பேரா இந்து அர்ச்சகர் சங்கத் தலைவர் க. டினேஷ் குமார், தமிழ்ப்பள்ளிகள் மற்றும் ஆலயங்கள் தொடர்ந்து நிலை நாட்ட எதிர்கால மாணவர்களின் பங்களிப்பு அவசியமாக விளங்குகிறது என்றார்.