Oct 16, 2025
Thisaigal NewsYouTube
மனுஜோதி இன்டர்நேஷனல் அமைப்பின் தேசிய அளவிலான ஆன்மீக நூல் வெளியீட்டு விழா
ஆன்மிகம்

மனுஜோதி இன்டர்நேஷனல் அமைப்பின் தேசிய அளவிலான ஆன்மீக நூல் வெளியீட்டு விழா

Share:

ஜார்ஜ்டவுன், அக்டோபர்.07-

மனுஜோதி இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் “ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் ஆன்மீகப் பார்வையில் திருக்குறள் – குறள் ஓசை 1” எனும் நூல் வெளியீட்டு விழா, பினாங்கு, மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

திருநெல்வேலியில் அமைந்துள்ள மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில், மலேசியா ஸ்ரீ லஹரி கிருஷ்ணா தியான நிலையம் பேரவை உறுப்பினர்கள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ்விழாவில், பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு சோமு அதிகாரப்பூர்வமாக புத்தகத்தை வெளியீடு செய்தார்.

ஜனார் ரிசோர்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர். அருணாச்சலம் முதல் நூலை பெற்றுக் கொண்டார். ஒரு இனம் வாழ வேண்டும் என்றால் அதன் மொழி வாழ வேண்டும். அந்த மொழியை வாழ வைக்க, எழுத்துறை வாழ வேண்டும். எழுத்துறை வாழ்ந்தால்தான் எழுத்தாளர்கள் வாழ முடியும். இந்தத் திருக்குறள் புத்தகம் ஆன்மீக பார்வையில் எழுத்தப்பட்டுள்ளது. ஆன்மீகப் பார்வையில் திருக்குறள் ஒரு புதுமையான நோக்கம் என டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு புகழாரம் சூட்டினார்.

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா தியான நிலைய மலேசியா பேரவை உறுப்பினர் எஸ்.மாரிமுத்து கூறுகையில், ஆன்மீகப் பார்வையில் திருக்குறள் என்ற புத்தக வெளியீடு மனுஜோதி ஆசிரமம் சார்பாக அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

ஒரே நேரத்தில இன்றைக்கு நடக்கின்ற நிகழ்ச்சி, 43 இடங்களில் நடைபெறுகிறது. நான்கு நிகழ்ச்சி ஏற்கெனவே இரண்டாம் தேதி நடைபெற்றது. மீதம் 38 நிகழ்ச்சிகள் இன்று ஒரு சேர நடந்து கொண்டிருக்கிறது. திருநெல்வேலியில் அடுத்த வாரம் நடைபெறும் என்பதை அவர் தெரிவித்தார்.

ஜாதி, இன, சமய, மொழி வேறுபாடின்றி — ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற தத்துவத்தைப் போதிக்கும் மனுஜோதி ஆசிரமம், ஆன்மீக ஒற்றுமை, மனிதநேயத்தை வளர்க்கும் நோக்குடன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.

இவ்விழாவில் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மலேசியா இந்து சங்கம் பட்டர்வொர்த் மற்றும் புக்கிட் மெர்தாஜாம் பேரவை, பல்வேறு சமூக அமைப்புகள், தொழிலதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டதோடு அவர்கள் அனைவரும் மனுஜோதி ஆசிரமம் சார்பாக கௌரவிக்கப்பட்டனர்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இப்புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கும் இப்புத்தகம் இலவசமாக வழங்கப்படும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

Related News