Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பகான் டாலாம் உக்கிர காளியம்மன் ஆலய நில விவகாரத்திற்கு சுமூகத் தீர்வு: சட்டமன்ற உறுப்பினர் குமரனின் அதிரடி நடவடிக்கை!
ஆன்மிகம்

பகான் டாலாம் உக்கிர காளியம்மன் ஆலய நில விவகாரத்திற்கு சுமூகத் தீர்வு: சட்டமன்ற உறுப்பினர் குமரனின் அதிரடி நடவடிக்கை!

Share:

பட்டர்வொர்த், ஜூலை.28-

பட்டர்வொர்த், Jalan Limbongan, Jalan Chain Ferry-யில் வீற்றிருக்கும் 87 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற ஸ்ரீ முனீஸ்வரர் ஸ்ரீ உக்கிர காளியம்மன் ஆலயத்தின் நீண்டகால நிலப் பிரச்சினைக்கு ஒரு வழியாக சுமூகத் தீர்வு காணப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில், கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வெறும் கையை விட்டுப் பிரசாதம் எடுத்தல் மற்றும் ஒன்பது கூர்மையான வெட்டுக் கத்திகளின் மீது பக்தர்கள் நடந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றுதல் போன்ற தீவிர ஆன்மீக அதிர்வுகள் நிறைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம் இதுவாகும். இத்தகைய புகழ்பெற்ற ஆலயத்தைப் புனரமைப்பதற்காக, அதன் தலைவர் குமரவேல் குருக்கள் தனது சொந்தப் பணமான சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட்டைச் செலவிட்டிருந்தார்.

இருப்பினும், ஆலயத்தின் நிலம் முறைப்படி ஆலயத்தின் பெயரில் இல்லாததால் அதன் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. இதனால், ஆலய வளர்ச்சிக்கு நன்கொடைகள் வழங்கவும் யாரும் முன்வரவில்லை. இத்தகைய இக்கட்டான சூழலில், குமரவேல் குருக்கள், இந்த விவகாரத்தை நேரடியாகப் பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணனின் பார்வைக்குக் கொண்டுச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய குமரன் கிருஷ்ணன், நிலத்தின் தற்போதைய உரிமையாளரான 'சவுதர்ன் பைப்' (Southern Pipe) நிறுவனத்துடன் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட கூட்டுப் புரிந்துணர்வின் அடிப்படையில், ஆலயத்திற்கான நிலப் பயன்பாட்டு அனுமதி இப்போது அதிகாரப்பூர்வமாகப் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

இந்த அதிரடித் திருப்புமுனையால் ஆலயத்தின் எதிர்காலம் குறித்த கவலைகள் நீங்கி, மகிழ்ச்சியும் நிம்மதியும் அளிப்பதாக உள்ளது என்று குமரவேல் குருக்கள் தெரிவித்தார்.

கடந்த வாரம் இந்த ஆலயத்திற்கு நேரில் வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணனுக்கு, ஆலயத்தில் நீர் தேங்கும் பிரச்னை குறித்து தலைவர் குமரவேல் குருக்கள் விரிவான விளக்கம் அளித்தார். அதேவேளையில் 87 ஆண்டுகால நிலப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, சொந்த நிலப்பட்டா கிடைப்பதற்கு அரும்பாடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணனுக்கு, குமரவேல் குருக்கள் ஆனந்தக் கண்ணீருடன் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related News

பகான் டாலாம் உக்கிர காளியம்மன் ஆலய நில விவகாரத்திற்கு சும... | Thisaigal News