ஜார்ஜ்டவுன், நவம்பர்.02-
எதிர்வரும் நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பினாங்கு, தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகத்தின் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி வழங்கினார்.
இதற்கான காசோலையை துணை அமைச்சர் லிம் ஹுய் யிங், ஆலயத்தின் திருப்பணி குழுவின் ஆலோசகர் டத்தோஸ்ரீ கே. குமரேந்திரன் மற்றும் ஆலயப் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார்.
காசோலையை ஒப்படைக்கும் இந்நிகழ்வில் பாகான் எம்.பி. லிம் குவான் எங், பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்எஸ்என் ராயர், துணைத் தலைவர் டாக்டர் லிங்கேஸ்வரன், ஜசெக. மூத்த தலைவர் லிம் கிட் சியாங், புக்கிட் குளுகோர் எம்.பி. ராம் கர்ப்பால், பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் ஹுய் யிங், நிதி அமைச்சின் இந்த பங்களிப்பானது, அனைத்து இந்து ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் இதர வழிபாட்டுத் தலங்கள் முதலியவை தங்கள் வழிபாட்டுத்தலத்திற்கான பராமரிப்புப் பணிகள், சீரமைப்புப் பணிகள் முதலியவற்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவையும் கடப்பாட்டையும் காட்டுகிறது என்றார்.
பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் கூறுகையில், பினாங்கு இந்து அறப்பணி வாரியம் செய்து வரும் முயற்சிகள் யாவும் மக்கள் நலன் கருதி இருக்கிறது. அவ்வாரியத்தின் பணிகள் இத்துடன் நின்று விடாமல் அடுத்தடுத்து வரும் மேம்பாட்டுத் திட்டங்களிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று லிம் கேட்டுக் கொண்டார்.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும், பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான ஆர்எஸ்என் ராயர் கூறுகையில், ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கு நிதி வழங்கியிருக்கும் துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங்கிற்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அதுமட்டுமின்றி பினாங்கு இந்து அறப்பணி வாரியம், மாநிலத்தில் உள்ள ஆலயங்களுக்கு செய்து வரும் நற்காரியங்களைக் கருத்தில் கொண்டு அனைவரும் உறுதுணையாக இருக்கும்படி ராயர் கேட்டுக் கொண்டார்.








