2026ஆம் ஆண்டில் சிறந்த விளையாட்டுச் சாதனைகளைப் படைத்த கூட்டரசுப் பிரதேச விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுச் சங்கங்களைப் பாராட்டும் வகையில், 1.19 மில்லியன் ரிங்கிட் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ அறிவித்துள்ளார்.
கூட்டரசுப் பிரதேச விளையாட்டு மன்றத்தின் மூலம் இந்தத் தொகை வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டு சிலாங்கூரில் நடைபெற்ற சுக்மா விளையாட்டுப் போட்டியில், கூட்டரசுப் பிரதேச அணி 51 தங்கம், 54 வெள்ளி, 52 வெண்கலம் என மொத்தம் 157 பதக்கங்களை வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒட்டுமொத்த நிலையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
பாரா சுக்மா போட்டியிலும் 13 தங்கம் உள்ளிட்ட 49 பதக்கங்களை வென்று ஆறாவது இடத்தைப் பெற்றது.
மேலும், பாரா விளையாட்டு வீரர்களுக்கும் சுக்மா வீரர்களுக்கு இணையான ஊக்கத்தொகை வழங்கப்படுவது இந்த ஆண்டின் முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது என்று ஹன்னா இயோ தெரிவித்தார்.
விளையாட்டையும் கல்வியையும் ஒருசேரத் தொடர முடியும் என்றும், இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் ஹன்னா இயோ வலியுறுத்தினார்.








