பெட்ரோனாஸ் கிராண்ட் பிரிக்ஸ் ஓஃப் மலேசியா 2026 மோட்டார் சைக்கிள் பந்தயம், வரும் அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை பெட்ரோனாஸ் சிப்பாங் இண்டர்நேஷனல் சிர்கட்டில் நடைபெறவுள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முஹமட் தௌஃபிக் ஜோஹாரி கூறுகையில் மலேசிய மடானி கொள்கையின் கீழ், K2 ஹில்ஸ்டாண்ட் பகுதிக்கான டிக்கெட் ரஹ்மா டிக்கெட்டுகள் 49.90 ரிங்கிட் விலையில் தொடர்ந்து வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இன்று கோலாலம்பூர் அப்துல் சமாட் கட்டடத்தில் கூட்டரசு மண்படத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மையை மேம்படுத்த எஸ்ஐசி, எஸ்டபள்யுகோர்ப் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் டாக்டர் முஹமட் தௌஃபிக் இதனை கூறினார்.
கழிவுகளைத் தரம் பிரித்தல், மறுசுழற்சி நடவடிக்கைகள் மற்றும் தன்னார்வத் திட்டங்கள் மூலம் பந்தயத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்வதாக குறிப்பிட்ட டாக்டர் முஹமட் தௌஃபிக், அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை இந்த மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெறும் என்றார்.

இதற்கிடையே, பந்தயத்துக்கான டிக்கெட்டுகளில் 80 விழுக்காடு விற்பனையாகிவிட்டதாகவும், பிரிமியர் இருக்கைகள் மற்றும் ஹாக்கிம் டானிஷ் டிரிபூன் பிரிவுகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் பெட்ரோனாஸ் சிப்பாங் அனைத்துலக சிர்கட் தலைமைச் செயல் அதிகாரி அஸ்லான் ஷாரிஃப்மான் ஹானிஃப் தெரிவித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற பந்தயத்தை 190,977 ரசிகர்கள் நேரில் கண்டு களித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு போட்டியில் மலேசியாவின் இளம் பந்தய வீரர் ஹாக்கிம் டானிஷ், மோட்டோ3 உலக சாம்பியன்ஷிப் வீரராகத் தனது சொந்த மண்ணில் முதன்முறையாகக் களமிறங்கவுள்ளார். அவரது வருகை மலேசிய ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பந்தயத்தை ஒட்டி, ரசிகர்களுக்காக பிட் லேன் பார்வையிடும் நிகழ்ச்சி, வீரர்களின் கையொப்பம் பெறும் வாய்ப்பு, வீரர்களை நேரில் சந்திக்கும் நிகழ்ச்சிகள், இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.








