இன்னும் மூன்று வாரங்களில் நடைபெறவுள்ள ஃபோர்முலா ஓன், கல்ஃப் ஏர் பாஹ்ரென் கிராண்ட் பிரி (Gulf Air Bahrain Grand Prix) போட்டிக்கான ஏற்பாடுகளில் நிலுவையில் உள்ள அனைத்து விவகாரங்கள் மற்றும் ஒப்புதல்களை விரைவுபடுத்தி முடிக்குமாறு தொடர்புடைய அனைத்து அமைச்சுகள் மற்றும் முகமைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷாம்சுல் அஸ்ரி அபு பாக்கார் தமது முகநூல் பதிவில் வெளியிட்டுள்ள தகவலில், போட்டிக்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பந்தயத் தடம், பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து, பார்வையாளர்கள் நிர்வாகம், தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளிட்ட பணிகள் குறித்து முதன்மை குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த முக்கியமான காலகட்டத்தில் அமைச்சுகள் மற்றும் முகமைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்றும், போட்டி முழுவதும் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மலேசியாவில் எஃப்1 பந்தயமானது மீண்டும் வரும் அக்டோபர் 2 முதல் 4 வரை சிப்பாங் அனைத்துல சர்கியூட்டில் இந்த பந்தயமானது நடைபெற உள்ளது.
இந்தப் புகழ்பெற்ற பந்தயம் மீண்டும் மலேசியாவில் நடைபெறுவது, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பாஹ்ரென் மன்னர் கிங் ஹாமாட் இசா அல்-கலிஃபா இடையிலான வெற்றிகரமான வியூக முயற்சியின் பலனாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








