Aug 23, 2026
Thisaigal NewsYouTube
சுக்மா விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
விளையாட்டு

சுக்மா விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது

Share:

2026 ஆம் ஆண்டு சுக்மா விளையாட்டுப் போட்டியில் சிலம்பப் போட்டி நேற்று சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

செர்டாங் ஜெயா, எம்பிஎஸ்ஜே அரங்கில் நடைபெற்று வரும் சிலம்பப் போட்டியில், மொத்தம் 14 தங்கம், 14 வெள்ளி மற்றும் 20 வெண்கலப் பதக்கங்களை வெல்ல 14 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் களம் இறங்கியுள்ளன.

நேற்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும் இச்சிலம்பப் போட்டியில், 14 மாநிலங்களைச் சேர்ந்த 250 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளதாக மலேசிய சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் எம். சுரேஷ் முத்துசாமி தெரிவித்தார்.

ஒவ்வொரு சுக்மா விளையாட்டுப் போட்டியிலும் சிலம்பப் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, இவ்விளையாட்டை எதிர்காலத்தில் சீ விளையாட்டுப் போட்டி வரை கொண்டு செல்வதற்கான முயற்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுக்மா விளையாட்டுப் போட்டியில் நடைபெறும் சிலம்பப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கடந்த எட்டு மாதங்களாக தீவிரமாக மேற்கொண்டு வந்ததாக, சிலாங்கூர் மாநில சிலம்பக் கழகத் தலைவரும் ஏற்பாட்டுக்குழுத் தலைவருமான சரவணன் சின்னையா தெரிவித்தார்.

சிலம்பப் போட்டியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் கலந்து கொண்ட கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், இந்தியர்களின் பாரம்பரிய வீரக் கலையான சிலம்பப் போட்டியில் பங்கேற்றுள்ள 14 மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து போட்டியாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அதேவேளையில், சிலாங்கூர் மாநிலத்தின் சார்பில் சிலம்பப் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்குத் தேவையான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். குறிப்பாக, அவர்களுக்கான பயிற்சி அலவன்ஸ் மற்றும் பயிற்றுநர்களுக்கான அலவன்ஸ் வழங்கப்பட்டதுடன், தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்கி ஆதரவு அளித்து வருவதாக பிரகாஷ் சம்புநாதன் குறிப்பிட்டார்.

14 மாநிலங்களைச் சேர்ந்த 250 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில், மீதமுள்ள பதக்கங்களுக்கான போட்டிகள் நாளையும் விறுவிறுப்பாக நடைபெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து, 2026 சுக்மா சிலம்பப் போட்டியின் இறுதி பதக்க நிலவரமும் தெரியவரும்.

Related News