பிரிட்டனில் நடைபெற்ற 2026 Le Mans கோப்பை கார் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் ஜோசஃப் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்றார்.
அவர் இடம்பெற்ற அஜித் ரேசிங் அணி 38-வது இடத்தைப் பிடித்தது.
தமது நீண்ட கால திரைத்துறை நண்பரான அஜித்தைக் கண்டவுடன் ஓடி வந்து விஜய் கட்டியணைத்த காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்ததோடு, உலகெங்கிலும் உள்ள அஜித், விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026-ஆம் ஆண்டுக்கான லீ மான்ஸ் கப் சாம்பியன்ஷிப் போட்டியின் ஐந்தாவது சுற்றாக இந்தப் பந்தயம் நடைபெற்றது.
5.891 கிலோமீட்டர் நீளமுள்ள கிராண்ட் பிரீ தடத்தில், இரண்டு மணி நேரம் இப்பந்தயம் இடம்பெற்றது.
மேலும், இந்த பந்தயமானது ஃபார்முலா ஓன் போட்டியைப் போல அல்லாமல், லீ மான்ஸ் கோப்பை நீண்டநேர பந்தயமாக நடத்தப்படுகிறது. இதில் இரண்டு வீரர்கள் ஒரே காரைப் பகிர்ந்து கொண்டு பந்தயத்தில் பங்கேற்பது முக்கிய அம்சமாகும்.
LMP3, LMP3 Pro மற்றும் GT3 ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் அஜித் குமார் LMP3 Pro பிரிவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட லீ மான்ஸ் புரோதோடையிப் காரை ஓட்டினார்.
பந்தயத்தில் ஏஎன்எஸ் மோட்டோர்ஸ்போர்ட் அணி முதலிடத்தையும், R-ACE GP அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தன. அஜித் குமார் இடம்பெற்ற அஜித் ரேசிங் அணி 38-வது இடத்தைப் பெற்றது.
இதனிடையே, ஜோசஃப் விஜய், பந்தய கட்டுப்பாட்டு மையம் மற்றும் பந்தயத் தடத்தைப் பார்வையிட்டதுடன், நீண்டதூர கார் பந்தயங்களை நடத்துவதற்கான நவீன தொழில்நுட்பம், செயல்பாட்டு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், சில்வர்ஸ்டோன் பந்தய அருங்காட்சியகத்தையும் அவர் நேரில் பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நடிகை திரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








