மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 பந்தயத்தை நடத்துவது தொடர்பான இறுதி முடிவு, நாட்டின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கையில்தான் உள்ளது என்று பெட்ரோனாஸ் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வணிக நிறுவனமாகிய பெட்ரோனாஸ், நாட்டின் நீண்ட கால நலனை மேம்படுத்தும் மற்றும் அதன் மூலோபாய முன்னுரிமைகளுக்கு ஏற்ற வாய்ப்புகளைத் தொடர்ந்து ஆராயும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி நடத்தப்படாமல்போனால், அதற்கு மாற்றாக மலேசியா இந்தப் போட்டியை நடத்தக்கூடும் என்ற ஆரம்பகட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டாக்டர் முகமது தௌபிக் ஜொகாரி, செப்பாங் பன்னாட்டு வட்டார ஓடுதளத்தில் போட்டியை மீண்டும் நடத்துவது சாத்தியமா என்பது குறித்து அமைச்சகம் தீவிரமாக விவாதித்து வருவதாகவும் மதிப்பீடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமைச்சகம் ஆகியவை இது குறித்த ஆரம்பத் தகவல்களைப் பெற்றுள்ளதாகவும், இறுதி முடிவு எட்டப்பட்டதும் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மலேசியா கடந்த 2017-ஆம் ஆண்டு இறுதியாக F1 கிராண்ட் பிரிக்ஸ் போட்டியை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், செப்பாங் ஓடுதளம் மோட்டோஜிபி போட்டிகளைத் தொடர்ந்து நடத்துவதுடன், F1 போட்டியை நடத்துவதற்கான தேவையான எஃப்.ஐ.ஏ தரம் 1 உரிமத்தையும் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. மெர்சிடிஸ் F1 அணியின் நீண்டகாலக் கூட்டாளியான பெட்ரோனாஸ், மோட்டார் ஸ்போர்ஸ் நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுத் துறையில் நாட்டின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.








