மலேசிய கால்பந்து சங்கமான எஃப்எஎம்மின் புதிய தலைவராக அப் கானி ஹசான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2025 முதல் 2029-ஆம் ஆண்டு வரையிலான பதவிக்காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு அவர் தலைவராக செயல்படுவார் என மலேசிய கால்பந்து சங்கம் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தலைவர் பதவிக்கான நேரடிப் போட்டியில் ஷாரில் மொக்தாரை எதிர்த்து 20 வாக்குகள் பெற்று அப் கானி ஹசான் வெற்றி பெற்றார். ஷாரிலுக்கு 5 வாக்குகள் கிடைத்தன.
இன்று எஃப்எஎம்மின் சிறப்பு மாநாடு மற்றும் நிர்வாகக் குழு தேர்தல் நடைபெற்ற போது இந்தத் தேர்தலானது இடம்பெற்றது.
ஆசிய கால்பந்து கூட்டமைப்பான ஏஎஃப்சியின் நிர்வாக ஆய்வைத் தொடர்ந்து எஃப்எஎம்மின் முழு நிர்வாகக் குழுவும் பதவி விலகி 7 மாதங்களுக்குப் பிறகு இந்தத் தேர்தல் நடைபெற்றுள்ளது.
அப் கானி ஹசான் தற்போது மலேசிய கால்பந்து லீக் அமைப்பின் தலைவராகவும், ஷாரில் மொக்தார் சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவராகவும் உள்ளனர்.








