கோலாலம்பூர், ஜூலை.26-
உலகளவிலான ONE Championship முவா தாய் பட்டத்தை வென்ற முதல் மலேசிய வீரரான அலிஃப் ராகிப் என்றழைக்கப்படும் அஹ்மாட் நோர் இமான் அலிஃப் ராகிப்பிற்கு Ahmad Nor பிரதமர் டத்தோ ஶ்ரீ அனுவார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அன்வார் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அலிஃப் ராகிப்பின் சாதனை மலேசியாவுக்கு பெருமை சேர்த்ததுடன், உலக அரங்கில் போட்டியிட்டு வெற்றி பெறும் திறன், தைரியம் மற்றும் உறுதி மலேசிய இளைஞர்களிடம் இருப்பதை நிரூபித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரலாற்றுச் சாதனை மேலும் பல இளைஞர்களுக்கு ஊக்கமாக அமையட்டும் என்றும், அர்ப்பணிப்பும் நம்பிக்கையும் இருந்தால் எதுவும் சாத்தியமற்றது அல்ல என்றும் அன்வார் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
22 வயதான அலிஃப் ராகிப், பாங்காக்கில் உள்ள Lumpinee குத்துச் சண்டை மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தாய்லாந்தின் Sam-A Gaiyanghadao-வை ஐந்தாவது சுற்றில் நாக்-அவுட் செய்து ONE Championship பட்டத்தை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் அவர் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், மலேசிய மதிப்பில், 2 லட்சத்து 4,565 ரிங்கிட் பரிசுத் தொகையை அலிஃப் ராகிப் பெற்றுள்ளார்.








