2026 பிஃபா உலகக் கிண்ண காற்பந்து இறுதிப் போட்டியை பொதுமக்கள் ஒன்றுகூடி ரசிக்கும் வகையில், கூலிம் நகராண்மைக் கழகமும், கூலிம் மாவட்ட போலீஸ் துறையும் இணைந்து கெலாடி மினி விளையாட்டரங்கில் பிரமாண்டமான நேரடி திரையிடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்வில் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுடன் இணைந்து இறுதிப் போட்டியைப் பார்வையிட்டார்.
கூலிம் மாவட்ட மக்களுக்கும் அரசுத் துறைகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நேற்று இரவு 8.00 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், அதன் ஒரு பகுதியாக கூலிம் நகராண்மைக் கழகம் மற்றும் குடிநுழைவுத் துறை அணிகளுக்கு இடையிலான நட்புமுறை காற்பந்து போட்டியும் நடைபெற்றது.


போட்டியை கூலிம் நகராண்மைக் கழகத்தின் தலைமை அதிகாரி டத்தோ ஹாஜி ஹெல்மி யூசுப் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, அரசுத் துறைகளின் கண்காட்சி அரங்குகள், ஜூலான் ரஹ்மாப், பொதுமக்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதிகாலை 2.00 மணியளவில், சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் நிகழ்விடத்திற்கு வருகை தந்து, 500 பேருக்கு இலவச தலைக்கவசங்களை வழங்கியதுடன், பொதுமக்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். பின்னர், நிகழ்ச்சியின் அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுகளையும் வெற்றியாளர்களுக்கு வழங்கினார்.

பின்னர், அதிகாலை 3.00 மணியளவில் கூலிம் கெலாடி மினி விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த மாபெரும் திரையில் 2026 பிஃபா உலகக் கிண்ண காற்பந்து இறுதிப் போட்டி ஒளிபரப்பப்பட்டது.
ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான இறுதிப் போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்றுகூடி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். கூலிம் மாவட்டத்தில் திரண்டிருந்த ரசிகர்களின் உற்சாகம் விழாவிற்கு மேலும் மெருகூட்டியது.










