உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதிச் சுற்றில் பெல்ஜியம் அணியை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், இளம் நட்சத்திர வீரர் லமின் யமால் தனது சிறந்த ஆட்டத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றும், இனிவரும் போட்டிகளில் அது வெளிப்படும் என்றும் ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் லூயிஸ் டி லா புவென்டே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் ஸ்பெயின் அணி கோப்பையை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்த லமின் யமால், இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை தனது முழுமையான திறமையை வெளிப்படுத்தவில்லை. காயம் காரணமாக இத்தொடரின் தொடக்கத்தில் சற்று சிரமப்பட்ட அவர், இதுவரை ஒரு கோல் மட்டுமே அடித்துள்ளார். எனினும், அவரது ஆட்டம் எதிரணி தற்காப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.
ஸ்பெயின் அணி இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை ஒரு கோல் கூட எதிரணிக்கு விட்டுக்கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், கடந்த போட்டியில் அமெரிக்காவிற்கு எதிராக நான்கு கோல்களை அடித்து வலுவான ஃபார்மில் இருக்கும் பெல்ஜியம் அணியை ஸ்பெயின் எதிர்கொள்ள உள்ளது. இந்த முக்கியமான கால் இறுதிப் போட்டியில் லமின் யமால் தனது அபாரமான ஆட்டத் திறனை முழுமையாக வெளிப்படுத்துவார் என்று பயிற்சியாளர் செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.








